இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள தமிழ்க் கைதிகள் 30 பேர் புதன்கிழமை(நவம்பர் 11) பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. சிறையில் உண்ணாவிரதத்தில் இருப்பவர்களை சந்தித்த மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் இதை அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கிடையில் தமிழ்க் கைதிகளின் பிரச்ச்pனைக்குத் தீர்வு காணப்படும் என்று இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அளித்திருந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி, தமிழ்க்கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றார்கள்.
அவர்களைச் சென்று பார்வையிட்டபோதே அமைச்சர் சுவாமிநாதன் இந்தத் தகவலை வெளியிட்டதாக அப்போது அந்தச் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

படிப்படியாக தமிழ்க்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன், உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு தமிழ்க் கைதிகளிடம் கோரிய போதிலும், அதனை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டாக சித்தார்த்தன் கூறினார்.
கைதிகளை விடுதலை செய்யும் விடயத்தில் அரசாங்கம் தங்களையும் மக்களையும் ஏமாற்றிவிட்டதாகவே தமிழ்க் கைதிகள் உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை தீபாவளி தினமாகிய செவ்வாயன்று, தமிழ்க் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி மன்னார் நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.
தமது உறவுகள் விடுதலை செய்யப்படவில்லை எனக் கூறி தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இன்று கருப்பு பட்டிகளை அணிந்து தமது எதிர்ப்பை தெரிவித்தனர் என வடக்கு கிழக்கு பகுதியிலுள்ள பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
(பிபிசி தமிழோசை)