ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் இதழியலாருமான சிற்பி என்றழைக்கப்படும் சி. சரவணபவன் கொழும்பில் காலமானார்.
அடிப்படையில் சிறுகதை ஆசிரியராகவும் நாவலாசிரியராகவும் அறியப்பட்ட சிற்பி ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கலைச்செல்வி என்ற இதழிலும் இந்துசாதனம் இதழிலும் ஆசிரியராக கடமையாற்றியவராவர்.
1933இல் யாழ்ப்பாணம் காரை நகரில் பிறந்த இவர் சென்னை கிறிஸ்துவக் கல்லரியில் கல்வி கற்றார். உசன் இராமநாதன் மகா வித்தியாலயம் மற்றும் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி ஆகியவற்றில் அதிபராகவும் கடமையாற்றினார்.
சிற்பி மற்றும் யாழ் வாசி என்ற பெயர்களில் எழுதிய இவர் நிலவும் நினைவும் சத்திய தரிசனம் என்ற சிறுகதைத் தொகுதிகளையும் உனக்காக கண்ணே என்ற நாவலையும் எழுதியவராவார்.
தமிழகத்தில் கல்வி பயிலும் காலத்தில் இளந்தமிழகம் என்ற இதழை வெளியிட்டதுடன் 1952இல் மலர்ந்த காதல் என்ற தனது முதல் சிறுகதையை சுதந்திரன் இதழில் எழுதி எழுத்துலகில் பிரவேசித்தார்.
ஈழத்தின் பல்வேறு பத்திரிகைகளிலும் தமிழக சஞ்சிகைகளான கல்கி, மஞ்சரி, புதுமை, கலைமகள், தீபம் ஆகிய சஞ்சிகைகளிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன.
திருவல்லிக்கேணி ஒளவை தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றார். சென்னை திருத்துவக் கல்லூரியில் தமிழ் மொழிக்கான ராஜா சேதுபதி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
ஈழத்து எழுத்தாளர் பன்னிரண்டு பேரின் சிறுகதைகளைத் தொகுத்து 1958 இல் ஈழத்துச் சிறுகதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பைக் கந்தரோடைத் தமிழருவிப் பதிப்பகம் மூலம் வெளியிட்டார். ஈழத்து எழுத்தாளர்கள் பலரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.
(குளோபல் தமிழ் செய்திகள்)