நீண்ட காலமாக விசாரணை முடிவின்றி சிறைச்சாலைகளில் உள்ள தமிழ்க் கைதிகளை விடுதலை செய்வதில் தமக்கு ஆட்சேபணை எதுவுமில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்தக் கைதிகளை விடுதலை செய்தால், விடுதலைப்புலிகளை அரசாங்கம் விடுதலை செய்துவிட்டது எனக் கூறி நெருக்கடி கொடுப்பதற்கும் ஒரு தரப்பினர் இருக்கின்றார்கள் என்பதையும் குறிப்பிட்டிருப்பதாக, அவரைச் சந்தித்துப் பேசியவர்களில் ஒருவராகிய வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற தமிழ்க் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தி கூறியிருந்ததாகவும் அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண சபையின் அமைச்சர்களான ஐங்கரநேசன், டாக்டர் ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன், குருகுலராஜா ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவருடைய கொழும்பு அலுவலகத்தில் சந்தித்து ஒன்றரை மணி நேரம் வரையில் வடமாகாண சபையின் செயற்பாடுகள், மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையிலான உறவு என்பன குறித்து விரிவாகப் பேசியுள்ளார்கள்.
இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியுடன் அவருடைய தனிப்பட்ட ஆலோசகர் ஒருவரைத் தவிர வேறு அதிகாரிகளோ, அமைச்சர்களோ கலந்து கொள்ளவில்லை. அதேபோன்று வடமாகாண சபையின் தரப்பில் முதலமைச்சரும் மாகாண அமைச்சர்களும் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.
பல விடயங்களில் கொள்கை ரீதியாக இணக்கம் காணப்பட்டதேயொழிய ஜனாதிபதியினால் உறுதிமொழி எதுவும் வழங்கப்படவில்லை என்றும் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முதற் தடவையாகச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் வடமாகாண அமைச்சர்கள் நால்வரும் மகசின் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை கோரி உண்ணவிரதப் போராட்டம் நடத்தி வரும் தமிழ்க்கைதிகளையும் சந்தித்திருக்கின்றனர்.
ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் கைதிகளில் சிலர் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், எனினும் தங்களைப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகத் தொடர்ந்து போராடத் தயராக இருப்பதாகவும் மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் குறிப்பிட்டார்.
(பிபிசி தமிழோசை)