காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் – சுமந்திரன்

காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் – சுமந்திரன்

தான் கூறும் கருத்துக்கள் பிளவுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக யாராவது கருதினால் அதற்கு தான் மனம் வருந்துவதாகவும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகவும் – ஒரு இலகுநிலையில் (Comfort Zone) இருந்துகொண்டு மக்களை குழப்பியதாக யாராவது குற்றஞ்சாட்டினால் அந்த குற்றச்சாட்டை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு தயவுசெய்து தன்னை மன்னித்துக்கொள்ளுமாறும் – தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நேற்று வெள்ளிகிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அரசின் அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ள சுமந்திரன் அவர்களுக்கு எதிராக சிட்னியில் இடம்பெற்ற எதிர்ப்பு சம்பவங்களை தொடர்ந்து  மெல்பேர்னில் இடம்பெறவிருந்த நிகழ்வு அங்கு கூடியிருந்த ஒரு கூட்டத்தினரால் தடுக்கப்பட்டது.

மாலை 5 மணியளவிலேயே, நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்துக்கு பதாகைகள் சகிதம் வந்திறங்கிய இந்த கூட்டத்தினர், எவரையும் மண்டபத்தின் உள்ளே நுழைய விடுவதில்லை என்று கூறினார்கள். மண்டபத்துக்கு வெளியில் சுமந்திரனின் வருகைக்காக காத்திருந்த இந்த கூட்டத்தில் சிலர், மண்டபத்தின் உள்ளே ஏற்கனவே நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் – அவர்களுக்கு முன்னதாகவே – வந்துவிட்டதை கண்டறிந்து, “சுமந்திரனை உள்ளேயா ஒழித்து வைத்திருக்கிறீர்கள்” என்று கூச்சலிட்டவாறே ஓடிச்சென்று, நிகழ்வு ஏற்பாட்டாளர் ஒருவர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்தினார்கள். சிறிது நேரத்திலேயே அந்த முறுகல்நிலை அங்கிருந்த சிலரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

ஆனால், குழப்பம் மிக்க இந்த நிகழ்வை நடத்துவதற்கு மண்டப ஏற்பாட்டாளர்கள் விரும்பவில்லை என்றும் சுமந்திரன் கலந்துகொள்ளவிருந்த சந்திப்பு அங்கு நடைபெறாது என்பதை அறிவிப்பதற்காகவுமே அந்த ஒழுங்கமைப்பாளர் மண்டபத்துக்கு வெளியே தான் வந்திருந்ததாக கூறினார்.

தாக்குதலுக்கு உள்ளான இருவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறினர். ஆனால், நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அதனை நம்ப மறுத்த அந்த கூட்டத்தினர் இரவு 7.30 மணிவரை அங்கேயே நின்றுகொண்டிருந்தனர்.

இதற்கிடையில், சந்திப்பு இன்னொரு இடத்துக்கு மாற்றப்பட்டு – சுமந்திரனினதும் அவர் பங்குபற்றும் கூட்டத்தில் பங்குபற்றுவோரினதும் – பாதுகாப்பு காரணங்களுக்காக – அழைக்கப்பட்டோருக்கு மாத்திரமான நிகழ்வாக அது ஏற்பாடு செய்யப்பட்டது.

இரவு எட்டு மணியளவில் ஆரம்பமான இந்த கூட்டத்தில் சுமார் முப்பது பேரளவில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் பேசிய நிகழ்வின் ஒருங்கமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக சிட்னியில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

ஒரு காலத்தில் சிங்கள மக்களில் ஒரு கூட்டத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராக புலம்பெயர்ந்த மண்ணில் மேற்கொண்ட அடாவடித்தனங்களுக்கு காவல்துறையை அழைத்த காலம் மருவி, இன்று எமது இனத்தில் உள்ள குழப்பவாதிகளிடமிருந்து எமது மக்களை பாதுகாத்துக்கொள்வதற்கு காவல்துறையை அழைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலமை குறித்து கவலை தெரிவித்தார்.

அதன் பின்னர் சுமந்திரன் அவர்கள் தனது பேச்சை ஆரம்பித்தார். ஜெனீவா தீர்மானம், அதில் கூட்டமைப்பு வகித்த பங்கு, கைதிகள் விவகாரம் மற்றும் தாயகத்தின் நடப்பு நிலைவரம் உட்பட பல விடயங்களை விரிவாக விளக்கினார்.

சுமார் ஒரு மணிநேரம் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே மேற்படி மன்னிப்பை அவர் கோரியிருந்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –

“உண்மை எப்போதும் சுடும் என்பார்கள். நான் செய்த தவறும் செய்கின்ற தவறும் என்னென்றால், சுடும் என்று தெரிந்துகொண்டும் சுடுகின்ற பானையை கைகளில் கொடுக்கிறேன் போலுள்ளது. அதனை கொஞ்சம் ஆற்றிக்கொடுத்தால் நன்றாக இருக்குமோ என்று இப்போது நான் எண்ணுகிறேன்.

“அப்படியான அசௌகரியங்களுக்குள் மனவேதனைகளுக்குள் பிளவுகளை நான் ஏற்படுத்தியிருந்தால் அதற்கு நான் குற்றவாளி. அதற்கு நான் மனம் வருந்துகிறேன். முடியுமானவரை அந்த சூட்டை தணித்து கொடுக்கலாமா என்று ஆராய்கிறேன். இனி அப்படித்தன் செய்வேன் என்று நான் வாக்குறுதி கொடுக்கவில்லை. சில சமயங்களில் சுட சுட சொன்னால்தான் அது உண்மையாகவும் இருக்கும்.

“அதற்காக நான் மட்டும்தான் உண்மை சொல்வதாகவும் நினைக்கவேண்டாம். நான் சொல்கின்ற கருத்துக்கள் தவறாக இருந்தால், எங்கேயும் யாரும், எப்போதும் எடுத்துக்கூறினால் அதனை திருத்திக்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். அது பற்றி கலந்துரையாடி – உங்களது கருத்து சரியாக இருந்தால் – அதனை ஏற்றுக்கொள்வதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

நன்றி தகவலும் படமும் தெய்வீகன், ஒஸ்ரேலியா

(நன்றி ; தினக்கதிர்)

Share This Post

Post Comment