தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எண்ணம் இருந்தால்கூட அதனை தன்னால் நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு அரசியல் காரணங்கள் தன்னை கட்டுப்படுத்துகின்றன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தெரிவித்ததாக சுவிஸர்லாந்து நாட்டின் பிரதிநிதியிடம் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
இன்று சுவிஸ் நாட்டின் பிரதிநிதி கெய்ன் வால்கர் நெடர் கூர்ன் வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு வடக்கு முதல்வர் கருத்து தெரிவிக்கையில்,
சுவிஸ் பிரதிநிதிகளின் வருகை பிரதானமாக சிறைக்கைதிகள் பிரச்சினை தொடர்பாகவும்,அவர்களை இன்னமும் விடுவிக்காதது ஏன்? என்றவாறே எழுந்தது இதன்போதே தான் மேற்கண்டவாறு தெரிவித்தேன்.
மேலும் அவர்களிடம் கைதிகள் 23 பேரின் நிலமை மோசமாக இருக்கின்றது. அதிலும் 9பேர் நீர் கூட அருந்தாமல் உயிரிழக்கும் தருவாயில் உள்ளனர் என்று தெரிவித்த பொழுது, அதற்கு அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்று நீங்கள் கேட்டிருக்கலாமே என்று வினவினர். உண்ணாவிரதத்தை கைவிடும்படி எந்த அடிப்படையில் கேட்பது. எதிர்வரும் திங்கட்கிழமையே இந்தப் பிரச்சினைக்கு முடிவை அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பதால் ஒரு முடிவும் தெரியாமல் உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்று என்னால் கூறமுடியாது. அதனால் தான் தயங்கிக் கொண்டு இருக்கின்றேன் என அவர்களிடம் தெரிவித்தேன்.
அவர்கள் என்னிடம் மக்கள் உயிரிழந்தால் உங்களுக்குத் தானே நட்டம் அரசாங்கத்திற்கு எந்த நட்டமும் இல்லை தானே? என்று குறிப்பிட்டார்கள். அதற்கு இதுவொரு பாரதூரமான விடயம், மக்கள் தமது எதிர்ப்பை அகிம்சை வழியில் எடுத்துக்காட்டுவதாகவே இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான போராட்டங்கள் கூட நன்மை அளிக்காமல் போய்விட்டால் மக்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளும் நிலையே ஏற்படும் என்றேன்.
மேலும் அவர்கள் அரசியல் யாப்பை உருவாக்க பல உதவிகளை இலங்கைக்குச் செய்து கொடுத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
(யாழ் உதயன்)