இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் பயங்கரவாத அமைப்பினர் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பணயக் கைதிகள் சிலரை தலைவெட்டிக் கொல்லும் வீடியோக்களில் வந்திருந்த ஜிகாதி ஜான் என்பவரை இலக்கு வைத்து ஆளில்லா விமானத்திலிருந்து குண்டுவீசியுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
முகமது எம்வாஸி என்ற நிஜப்பெயருடைய அந்த பிரிட்டிஷ் பிரஜை கொல்லப்பட்டுவிட்டதாக கூடுதலான நிச்சயத்தன்மையுடன் தாங்கள் கருதுவதாக அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
சிரியாவின் ரக்கா நகருக்கு அருகே வியாழன் இரவு ஒரு வாகனத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அது.
ஜிகாதி ஜான் கொல்லப்பட்டது உறுதியாகுமானால் அது ஐ எஸ் எதிரான சண்டையில் கிடைத்துள்ள ஒரு முக்கியமான வெற்றியாக அமையும் என்று வாஷிங்டனிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
ஏனென்றால் ஐ எஸ் அமைப்பினரின் வீரியமிக்க பிரச்சாரத்தின் அடையாளமாக அவர் இருந்துவந்துள்ளார் என எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
(பிபிசி தமிழோசை)