பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, நேற்று முன்தினம் பிணை வழங்கப்பட்ட கைதிகளில் 24 பேர் இன்று பிற்பகல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இழுபறிக்கு மத்தியில், குறித்த 31 பேருக்கும் கடந்த புதன்கிழமை பிணை வழங்கப்பட்ட போதிலும், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட பிணை விதிகளை பூர்த்தி செய்யமுடியாத நிலையில் அவர்கள் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்றைய தினம் அவர்களது உறவினர்கள் வந்து பிணையில் ஒப்பமிட்டதை அடுத்து அவர்களை விடுவித்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார்.
தலா 10 இலட்சம் ரூபா கொண்ட இரு சரீரப் பிணை விதிக்கப்பட்டதோடு, பிணை வழங்கும் குறித்த பிணையாளர்கள், சந்தேக நபர்களின் ஊரைச் சேர்ந்தவர்கள் என கிராம சேவகர் உறுதிப்படுத்த வேண்டும் என பிணை விதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், சந்தேகநபர்களின் கடவுச்சீட்டுகளை தடைசெய்வதாக அறிவித்த நீதவான், இரு வாரங்களுக்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் அல்லது கொழும்பிலுள்ள தீவிரவாத ஒழிப்பு விசாரணை பிரிவில் சமூகமளிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
தாங்கள் தமது முகவரியை மாற்றுவதாயின், அது குறித்து தீவிரவாத ஒழிப்பு விசாரணை பிரிவிற்கு அறிவிக்க வேண்டும் அவ்விதிகள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(யாழ் உதயன்)