பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடர் தாக்குதலில் ஈடுபட்டிருந்த ஏழு தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது என பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒமர் இஸ்மாயில் மொஸ்தஃபா எனும் அந்த பிரெஞ்சு பிரஜை தீவிர இஸ்லாமியவாதக் கொள்கைகளைக் கொண்டிருந்தவர் என்பதால் ஏற்கனவே காவல்துறையினர் கண்காணிப்பு வட்டத்தில் இருந்துள்ளார்.
மிகவும் மோசமாக தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கிடைத்த விரல் பகுதியை வைத்து அந்த 29 வயது நபர் அடையாளம் காணப்பட்டார்.
அவர் சிரியாவுக்கு சென்றிருந்தாரா என்பதைக் கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. பாரிஸ் நகரில் நடைபெற்ற தொடர் தாக்குதல்களுக்கு தாமே காரணம் என இஸ்லாமிய அரசு என தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்பு அறிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுத் தாக்குதல்கள் தொடர்சியாக நடத்தப்பட்டதில் குறைந்தது 129 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல்களை நடத்தியவர்கள் நன்றாக திட்டமிட்டு மூன்று குழுக்களாக பிரிந்து செயல்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரும் தற்கொலை அங்கி அணிந்து கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளை வைத்திருந்தனர் எனவும் பிரெஞ்சு அரச வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
(பிபிசி தமிழோசை)