முதல்வர் ஜனாதிபதிக்கு கைதிகள் குறித்து கடிதம் !

முதல்வர் ஜனாதிபதிக்கு கைதிகள் குறித்து கடிதம் !

உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதுடன், உயிராபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணம் எம்மிடத்தில் உள்ளது. இது தொடர்பாக திங்கள் வரை காத்திருக்காது, விரைந்து செயற்படுமாறு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று மாலை அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நீண்ட ஆண்டுகளாக எவ்வித காரணங்களுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையை இன்றுவரை துரிதப்படுத்தாமல் உள்ளமை கவலையளித்தாலும், தாங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் முழுமையான முடிவு தருவதாக எமது சந்திப்பில் உறுதிப்படுத்தினாலும், அந்த நாட்கள் வருவதற்குள் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிராபத்து ஏற்படுமோ என்ற மன பயம் உள்ளது.

நீங்கள் வழங்கிய திங்கள் என்ற முடிவை விரைவுபடுத்தி அதற்கு முன்னதாக விசேட அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விரைந்து முடிவெடுங்கள். நீங்கள் முன்னர் விடுதலை செய்த 31 அரசியல் கைதிகளில், 7 பேர் சிங்களவர்கள். இங்கு கூட ஒரு பாராபட்சம் காட்டப்பட்டுள்ளது அத்தோடு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அதி உச்ச தண்டனையைக் கூட அவர்களின் குடும்ப உறவுகளால் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது.

இதற்கும் மேலாக ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருக்கக் கூடிய நீங்கள் சிறைக் கைதிகளின் உயிர் சார்ந்த பிரச்சினைகளில் விரைவாக செயற்படாத பட்சத்தில், சிறையில் ஒரு உயிர் இழக்கப்படுமாக இருந்தால்கூட அதன் தாக்கம் வடக்கு, கிழக்கில் பாரிய விபரீதத்தை ஏற்படுத்தி விடும் என்பதனை தங்களுக்க நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்” என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

(யாழ் உதயன்)

Share This Post

Post Comment