ரஷ்ய தடகள சம்மேளனம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.
லண்டனிலிருந்து தொலைக்காட்சி வழியாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அடுத்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய தடகள வீரர்கள் பங்கேற்க முடியாது. மேலும் எவ்விதமான சர்வதேச தடகளப் போட்டிகளையும் ரஷ்யா நடத்த முடியாது.
ஊக்க மருந்து தொடர்பான சர்ச்சையில் ரஷ்யா சிக்கியுள்ளது ‘வெட்கக்கேடான சம்பவம்’ என சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைவர் செபாஸ்ட்டியன் கோ தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலையில், தற்காலிக இடைநீக்கம் என்பதே மிகவும் கடுமையான தண்டனையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(பிபிசி தமிழோசை)