“கொலைவெறி மனநோய் பிடித்த அரக்கர்கள்” யார் ?

“கொலைவெறி மனநோய் பிடித்த அரக்கர்கள்” யார் ?

பாரிஸில் வெள்ளிக்கிழமை நடந்த கொடூரத் தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெரி, இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) தீவிரவாதிகளை, “கொலைவெறி மனநோய் பிடித்த அரக்கர்கள்” ( psychopathic monsters) என்று வர்ணித்திருந்தார்.

ஆனால் “கொலைவெறி மனநோய் பிடித்தவர்” (psychopath) என்பதன் பொருள் என்ன ?

லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியின் டெவெலப்மெண்டல் சைக்கோபெத்தாலஜி துறைப் பேராசிரியரான, எஸ்ஸி வைடிங் அவர்கள் பிபிசியிடம் இது குறித்து பேசினார். வெள்ளிக்கிழமை , தீவிரவாதிகள் பாரிஸில் குறைந்தது 129 பேரைக் கொன்று, மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காயப்படுத்தினர்.

இஸ்லாமிய அரசு என்ற அமைப்பு பாரிஸில் மதுக்கடைகள், உணவகங்கள், இசையரங்கம், பிரான்ஸின் தேசிய விளையாட்டரங்கம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை தான் தான் நடத்தியதாகக் கூறியது.

இந்த தாக்குதல்களிலேயே மிக மோசமான சம்பவம் , பேட்டக்லான் இசையரங்கில் நடந்த அட்டூழியம்தான். இதில் மூன்று துப்பாக்கிதாரிகள் நுழைந்து , கூட்டத்தினரை நோக்கி திரும்பத் திரும்ப சுட்டு, பின்னர் இறந்து விழுந்தவர்களின் உடல்களிடையே நடந்து , ஒவ்வொரு மூன்றாவது உடலையும் மீண்டும் சுட்டனர்.

இந்த ஐ.எஸ் தீவிரவாதிகளை, “கொலைவெறி மனநோய் அரக்கர்கள்” என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி வர்ணித்திருந்தார்.

ஆனால் “கொலைவெறி மனநோய்” என்பது என்ன ?

மேலும் , பலரை ஒட்டுமொத்தமாகக் கொல்லும் எல்லோரும் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்களா ?

“கொலைவெறி மனநோயாளி” என்பதன் வரைவிலக்கணம்

ஆங்கிலத்தில் “சைக்கோபாத்” என்ற சொல்லுக்கு அகராதிகள், ‘தீராத மனநோய் பிடித்த , அசாதாரணமான வன்முறை கலந்த சமூக நடத்தையுள்ள ஒருவர்’ என்று பொருள் தருகின்றன.

இந்தக் கொலைவெறி மனநோய் கொண்டவர்கள் பொதுவாக உளச்சுத்தியற்ற தன்மை, பொறுப்பற்றதன்மை, அதீத நம்பிக்கை, உணர்ச்சிவசப்படுவது, சுயநலம், மற்றவர்களின் நிலையை உணர்ந்து கொள்ளாதது, குற்ற உணர்வு அல்லது தர்மசங்கடநிலை போன்ற குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறார்கள்.

விரக்தியடைவதைப் பொறுத்துக்கொள்ளாத தன்மை அவர்களுக்கு இருக்கும். அதே போல எளிதில் வன்செயலில் ஈடுபடுவார்கள்.

பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் தெளிவாகவே வன்செயலில் ஈடுபட்டவர்கள்தான். ஆனால் அதனால் இஸ்லாமிய அரசு என்ற அமைப்பே “கொலைவெறி மனநோய்” கொண்டவர்கள் என்று கூறமுடியுமா ?

பெருமெண்ணிக்கையில் மக்களைக் கொன்று குவித்து விட்டு, “கொலைவெறி மனநோய்” பீடித்தவர்களாக இல்லாமல் இருக்கமுடியுமா ?

லண்டனின் யுனிவர்சிட்டி கல்லூரியின் , டெவலப்மெண்டல் சைக்கோபெத்தாலஜி துறையின் பேராசிரியர் எஸ்ஸி வைடிங் அவர்களை பிபிசி இது தொடர்பாக பேட்டி கண்டது .

கேள்வி: பலரை ஒட்டுமொத்தமாகக் கொல்லும் எல்லோரும் “கொலைவெறி மனநோய்” பிடித்தவர்களா ?

பேரா.வைடிங்: நிச்சயமாகச் சொல்ல முடியாது- இது குறித்து சரியான தரவுகள் இல்லை. பலரை ஒட்டுமொத்தமாகக் கொல்லும் கொலையாளிகளில் பெரும்பாலோனோரை முறையாக , வழக்கமான மருத்துவ முறைகள் மூலம் மருத்துவரீதியாக ஆராயவில்லை என்பதால் இது குறித்து நிச்சயமாக சொல்ல முடியாது.

கேள்வி: இந்த தீவிரவாதிகள் செய்ததை செய்துவிட்டு, “கொலைவெறி மனநோய்” பிடித்தவர்களாகவும் இல்லாமல் இருக்கமுடியுமா ?

பேரா.வைடிங்: ஆம். இவர்கள் ஒரு சித்தாந்தத்தால் கவரப்பட்டு, தங்களுடன் ஒத்துப்போகாதவர்களை சற்று தரம் குறைவான மனிதப் பிறவிகளாகப் பார்க்கிறார்கள். இந்த மனிதச் சீரழிவு அவர்களால் கொல்லப்படுபவர்களின் நிலையுடன் அவர்களால் அனுதாபப்பட முடியாமல் போகவைக்கலாம். ஆனாலும், அவர்கள் அவர்களது லட்சியத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். அதற்காக ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள். அவர்களுக்குள் தோழமை உணர்வு இருக்கிறது. இந்த அம்சங்கள் எல்லாம் “கொலைவெறி மனநோய்” கொண்ட தனிநபர்களுக்கு இருக்காது. அவர்கள் வெறும் எண்ணிக்கையை மட்டும் பார்ப்பார்கள். சித்தாந்தங்கள் தனிநபர் கொலையாளிகளை அபூர்வமாகவே ஈர்க்கின்றன. உலகின் அல்லது சமூகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இருப்பதைப் போலவே, சில தீவிரவாதிகளுக்கு இந்த மனநோய் அம்சங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இது இருக்கும் என்பது சாத்தியமல்ல. கொலைவெறி மனநோய் கொண்டவர்கள் குழு ஒன்று ஒரு பொதுவான இலக்குக்காக, இணைந்து செயல்படமுடியாது. ஏனென்றால், இந்த கொலைவெறி மனநோய் கொண்ட தனிநபர்களை யாரும் தலைமை தாங்கி வழி நடத்துவது கடினம்.

கேள்வி: நீங்கள் ஆழமாக வைத்திருக்கும் நம்பிக்கை, அல்லது சித்தாந்தம், அல்லது கடமையுணர்வு காரணமாக வன்செயல்களை செய்தால், அதன் காரணமாகவே நீங்கள் கொலைவெறி மனநோய் கொண்டவர் அல்ல என்று கூற முடியுமா ?

பேரா வைடிங்: இந்தத் தனிநபர்களில் சிலருக்கு இந்த மனநோய் அம்சங்கள் இல்லை என்று கூறமுடியாது. ஆனால் பெரும்பாலோனோர் இந்த நோய் கொண்டவர்களல்ல. அவர்களால் கொல்லப்படுபவர்களை அவர்கள் மனிதர்களாகப் பார்க்காதிருக்க முடிவதால்தான், அவர்களால் அந்த பாதிக்கப்பட்டவர்கள் மீது எழக்கூடிய எந்த ஒரு அனுதாப உணர்வையும் அடக்கிக்கொள்ள முடிகிறது.

கே: ராணுவத்தினர் மற்றும் விமானப்படையினரும்தான் கொல்கிறார்கள். அவர்களை இது போன்ற “கொலைவெறி மனநோய்” கொண்டவர்கள் என்று கூறமுடியுமா ?

பேரா.வைடிங்: அது சரியானதாக இருக்காது. படையினருக்குக் குடும்ப உறவுகள் இருக்கின்றன. அவர்களின் பாச உறவுகளிடம் அவர்கள் நேர்மையாக நடந்துகொள்கிறார்கள். இந்த குணாதிசயங்கள் கொலைவெறி மனநோய் கொண்டவர்களுக்கு இருக்காது. படையினர் தங்கள் நாட்டைப் பாதுகாக்க விரும்புகிறார்கள். அவர்கள் போரிடப் பயிற்சி பெற்றவர்கள். இது சக மனிதர்கள் குறித்த சில இயல்பான உணர்வுகளை அவர்கள் புறந்தள்ளவேண்டியர்களாக இருக்கிறார்கள் என்று பொருளாகிறது. ஆனால் பல சிப்பாய்களுக்கு போரில் ஈடுபட்ட பின்னர் மோதலுக்குப் பிந்தைய மன உளைச்சல் (post traumatic disorder) ஏற்படுகிறது என்பதை நாம் அறிவோம். ஏனென்றால், அவர்கள் போரின் போது ஏற்பட்ட மன அதிர்ச்சியால் அவர்கள் ஆழமாகப் பாதிக்கப்படுகிறார்கள். போர் அவர்கள் மீது ஒரு உணர்ச்சிபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது கொலைவெறி கொண்ட மனநோயாளிகளுக்கு ஏற்படுவதில்லை.

கே: கொலைவெறி மனநோயாளிகளை எது உருவாக்குகிறது? இது மரபணுரீதியாக வருவதா , மூளை பாதிப்பால் உருவாவதா அல்லது சுற்றுச்சூழல் மற்றும் வளர்ந்த பின்னணி போன்றவைகளால் ஏற்படுகிறதா?

பேரா.வைடிங்: சிலர் இந்த மனநோய்க்கு உள்ளாவதற்கு மரபணுரீதியாகவே பலவீனமானவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் பலமான ஆதாரம் இருக்கிறது. ஆனால் மரபணுக்களே தலைவிதியை நிர்ணயிப்பதில்லை என்பதும் தெளிவாகவே இருக்கிறது. மரபணு மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்து அம்சங்கள் தனிநபர்களை இந்த நோயால் தாக்கப்படும் ஆபத்துக்குள்ளாக்குகின்றன. இந்த குறிப்பிட்ட அம்சங்கள் இன்னும் முழுமையாக அடையாளம் காணப்படவில்லை. கொலைவெறி மனநோய் கொண்ட தனிநபர்கள் மூளை பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. ஆனால் மற்றவர்களின் உணர்ச்சிகளை அவர்கள் பரிசீலிக்கும் விதத்தில் அவர்களது மூளை பாரபட்சமாக சிந்திக்கிறது என்று சொல்ல முடியும். மற்றவர்களின் கஷ்டங்கள் பற்றி இந்த தனிநபர்களின் மூளை பொதுவாக எல்லோரும் சிந்திப்பதைப் போல பார்ப்பதில்லை. உதாரணத்துக்கு, மற்றவர்கள் பயமடைகிறார்கள் என்பதை இவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. மற்றவர்களின் கஷ்டங்கள் பற்றி அவர்களது மூளை சற்று அலட்டிக்கொள்ளாமலே எதிர்வினையாற்றுகிறது. இதனால்தான் அவர்கள் மற்றவர்களை அனுதாபத்துடன் பார்ப்பதில்லை எனலாம்.

கேள்வி: எல்லா கொலைவெறி மனநோய் கொண்டவர்களும் கொலையுணர்ச்சி கொண்டவர்களா? கொலைசெய்யக்கூடியவர்களாக மாறும் சாத்தியக்கூறு கொண்டவர்களா ? இவர்கள் ஆபத்தானவர்களா ?

பேர.வைடிங்: இந்த மனநோய் கொண்டவர்கள் எல்லோரும் கொலையுணர்ச்சி கொண்டவர்களல்ல. நம்மில் எல்லோருமே கொலைசெய்யக்கூடியவர்கள்தான் என்று நினைக்கிறேன். நம்மில் பெரும்பாலோனோருக்கு அந்த சாத்தியக்கூறு என்பது நல்லவேளையாக பூஜ்யம் என்ற அளவுதான் . ஆனால் இந்த மனநோய் கொண்டவர்கள் மற்றவர்களைவிட கொலை செய்யும் ஆபத்து அதிகம் கொண்டவர்கள். ஒரு சாதாரண குடிமகனைவிட, இந்த கொலைவெறி மனநோயின் அம்சங்களைக் கொண்டவர்கள் சற்று கூடுதல் ஆபத்தானவர்கள். ஆனால், இரக்கமற்ற வகையில் நடந்து கொள்பவர்கள் அல்லது சுயமோகிகள் எல்லோரும் கொலையாளிகள் என்று கூறமுடியாது.

கொலைவெறி மனநோய் கொண்டவர்களின் குணாதிசயங்கள் என்ன ?

கொலைவெறி மனநோய் என்பது குறித்த ஒரு பட்டியலை ராபர்ட் ஹேர் மற்றும் சிலர் தயாரித்திருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் கூறப்பட்ட விஷயங்களை வைத்து ஒருவருக்கு இந்த கொலைவெறி மனநோய் இருக்கிறதா என்பதை மருத்துவரீதியாக ஆராய்ந்து சொல்ல முடியும்.

இந்த பட்டியலில் இடம்பெறும் விஷயங்கள்:

அக்கறையின்மை: மற்றவர்களின் கஷ்டங்களை அனுதாப உணர்வுடன் பார்க்காத தன்மை. இதயமற்ற அல்லது இரக்கமற்ற அக்கறையின்மை

ஆழமற்ற உணர்ச்சிகள்: பொதுவாக உணர்ச்சியற்று இருப்பது. குறிப்பாக சமூக உணர்வுகளான குற்ற உணர்வு, தர்மசங்கடப்படுதல் அல்லது அவமான உணர்வு இல்லாதிருப்பது.

பொறுப்பற்ற தன்மை: உங்கள் தவறுக்கு மற்றவர்கள் மீது பழி போடுவது

உளச்சுத்தியற்ற பேச்சு: மேலோட்டமான பேச்சு, மேலோட்டமான கவர்ச்சி மற்று மோசமான பொய்யராக இருப்பது

அதீத நம்பிக்கை: தனது மதிப்பைப் பற்றி அளவுக்கதிகமாக நம்புவது

உணர்ச்சிவயப்பட்ட நடவடிக்கை: நடத்தையை ஒழுங்குபடுத்திக்கொள்ளத் தவறுவது.

சுயநலம்: அகங்காரம்; பிறரை நேசிக்கும் தன்மை இல்லாதிருத்தல்

எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடமுடியாமை: யதார்த்த ரீதியிலான நீண்டகால இலக்குகள் இல்லாதிருத்தல். அது பற்றி கவலையின்மை.

வன்முறை: விரக்தியை சகித்துக்கொள்ளமுடியாத நிலை.எளிதில் வன்முறையில் ஈடுபடும் போக்கு.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment