தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ராவனா பலய அமைப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க்பபட்ட கைதிகளை விடுதலை செய்யக் கூடாது என இந்த அமைப்பு கோரியுள்ளது.
இன்றைய தினம் போராட்டம் நடத்திய இந்தக் குழு, ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றையும் ஒப்படைத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிச்சந்தேக நபர்கள் விசேட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென ராவனா பலய அமைப்பின் அழைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என நீதிமன்றில் நிரூபணமானால் அவர்களை விடுதலை செய்வதில் தவறில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளளார்.
கடந்த கால குற்றச் செயல்களை மன்னித்து பொதுமன்னிப்பு அடிப்படையில் குற்றவாளிகளை விடுதலை செய்வது மற்றுமொரு போருக்கு நிகரானது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
(யாழ் உதயன்)