எங்கெல்லாம் இஸ்லாமிய முகத்திரைக்கு தடை ?

எங்கெல்லாம் இஸ்லாமிய முகத்திரைக்கு தடை ?

ஆப்ரிக்க நாடான செனகோல் , அங்கு ஜிஹாதி தாக்குதல்கள் நடக்கும் ஆபத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், பெண்கள் தங்கள் முழு உடல் மற்றும் முகத்தை மூடும் வண்ணம் அணியும் ‘புர்கா’வை தடை செய்வது குறித்துப் பரிசீலித்துவருகிறது.

இந்த முழு முகத்தை மூடும் இஸ்லாமிய முகத்திரை, உடல் முழுவதையும் தளர்ச்சியாக மூடி , பார்ப்பதற்கு மட்டும் முகத்தில் ஒரு வலை வேலைப்பாடு செய்த திரையுடன் இருக்கும். பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் இதை அணிகிறார்கள்.

ஆனல், கடந்த காலங்களில் இது இஸ்லாமியத் தீவிரவாதிகள் வெடி பொருட்களை தாங்கிச்செல்ல உதவுவதால், இது ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சிலர் வாதிடுகிறார்கள்.

நைஜீரியாவிலிருந்து செயல்படும் தீவிரவாத குழுவான, பொக்கோ ஹராமிடமிருந்து அச்சுறுத்தல்கள் வரும் நிலையில், இந்த புர்கா பயன்பாடு குறித்து மேலும் கடுமையான விதிகள் கொண்டுவரப்படவேண்டும் என்று செனகோலின் உள்துறை அமைச்சர் அப்துலாயே தாவுதா முயற்சி செய்துவருகிறார்.

இந்த ஆலோசனகள் இஸ்லாத்துக்கு விரோதமானதாகப் பார்க்கப்படக்கூடாது என்று செனகோல் அரசு கூறுகிறது.

செனகோல் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை நாடு. ஆனால் , தனிமனித சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் ஆகியவைகளின் அடிப்படையில் இந்த உடையை அணிய பெண்களுக்கு இருக்கும் உரிமையை முன்வைக்கும் பலர் இந்த விவாதங்களால் சீற்றமடைந்திருக்கிறார்கள்.

ஆனால் செனகோல் மட்டுமே இந்த உடையை தேசப்பாதுகாப்பு என்ற காரணத்தினால் தடை செய்ய முயலவில்லை. வேறு நான்கு ஆப்ரிக்க நாடுகளும் இதைப் போல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன.

பொக்கோ ஹராமின் நிழல்

மத்திய ஆப்ரிக்காவில் உள்ள மூன்று நாடுகள் சமீபத்தில் புர்காக்கள் அணிவதை நாடெங்கிலும் தடை செய்திருக்கின்றன. சாட், கேபோன் மற்றும் காங்கோ ப்ரேஸ்ஸவில் ஆகிய நாடுகள்தான் இந்த உடையை நாடளாவிய அளவில் தடை செய்த நாடுகள். கேமரூன் நாடு அதன் வட கோடி பகுதியில் இந்த உடைக்கு கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது.

ஜூன் மாதம் சாட் நாட்டின் மிகப்பெரிய நகரான , என்’ஜமெனாவில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் ஒன்றில் 33 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, சாட் அரசு இந்த உடைக்குத் தடை விதித்தது.

இதையடுத்து, காங்கோ-ப்ரேஸ்ஸவில் மற்றும் கேபோன் ஆகிய நாடுகளும் பின்னர் கேமரூனில் நடந்த ஒரு தாக்குதலை அடுத்து இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்தன. கேமரூன் சம்பவத்தில், இரண்டு புர்கா அணிந்த பெண் தற்கொலை குண்டுதாரிகள் , நைஜீரிய எல்லையில் , ஃபோட்டோகொல் என்ற இடத்தில் தங்களை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இப்போது செனகோல் அந்த நாடுகளைப் பின்பற்றி அதே போன்ற ஒரு நடவடிக்கையை எடுக்கலாமா,வேண்டாமா என்று யோசித்து வருகிறது.

செனகோலில் இது போன்ற ஒரு தாக்குதல் நடைபெற்றதில்லை. ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்னர், நாட்டில் முதன் முறையாக, பயங்கரவாதம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் இது குறித்து எச்சரித்தனர்.

ஆனால் ஆப்ரிக்காவில் மட்டும் இந்த புர்கா தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை.

நவநாகரீக பிரான்ஸ் விதித்த தடை

கடந்த 2010ம் ஆண்டில் ஐரோப்பாவில் முதன்முறையாக பிரான்ஸ் பொது இடங்களில் புர்காவுக்குத் தடை விதித்தபோது அதற்கெதிராக பெரும் சீற்றம் எழுந்தது.

பிரெஞ்சு செனட், முகத்தை மட்டுமோ அல்லது முழு உடலையுமோ மூடும் புர்க்காக்களை மட்டுமல்லாமல், ஒரு தனி நபரின் அடையாளத்தை மறைக்கும், முகமூடிகள், பலக்ளாவாக்கள் , தலைக்கவசங்கள் அல்லது தலைமறைப்புகள் ஆகியவற்றையும் தடை செய்யும் ஒரு சட்டத்துக்கு ஏறக்குறைய ஏகமனதான ஆதரவுடன் வாக்களித்தது.

மேற்கு ஐரோப்பாவிலேயே மிக அதிகமாக, பிரான்சில்தான் முஸ்லீம்கள் வசிக்கிறார்கள். அங்கு முஸ்லிம்களின் மக்கள் தொகை சுமார் 50 லட்சம். அவர்களில் சுமார் 2,000 பெண்கள்தான் புர்காக்களை அணிகிறார்கள் என்று கணிக்கப்படுகிறது.

அப்போதிருந்த பிரெஞ்சு அதிபர் நிக்கொலாஸ் சார்க்கோஸி, முகத்திரை பிரெஞ்சு மண்ணில் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

அது “ஒற்றுமை மற்றும் அதனுடன் இணைந்த மதச்சார்பின்மை” ஆகியவைகளுக்கான பிரெஞ்சு தேசிய முன்மாதிரியுடன் ஒத்துப்போகாதது என்று அவர் கருதினார்.

இந்த விழுமியங்கள் 2004ல் கொண்டுவரப்பட்ட சட்டம் ஒன்றின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த சட்டத்தின் மூலம் எந்த ஒரு மதச் சார்பையும் வெளிப்படுத்தும் குறியீடுகளையோ அல்லது உடைகளையோ அணிவது தடை செய்யப்பட்டிருக்கிறது.

பிரான்சின் புர்கா தடை சட்டத்தின் மூலம் முகத்திரை அணியும் பெண்களுக்கு அபராதம் விதிப்பதை அறிமுகப்படுத்தியிருந்தது. புர்கா அணியும் பெண்களுக்கு 32,000 அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை ஆகியவை விதிக்கப்படும்.இந்தத் தடை முஸ்லீம் பெண்களை இலக்கு வைப்பதாக விமர்சிக்கப்பட்டு , 2014ல் இதற்கெதிராக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த நீதிமன்றம் இந்த சட்டத்தை சட்டபூர்வமானதென்று கூறிவிட்டது.

பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் பிற நாடுகள்

கடந்த 2012ல் பெல்ஜியம் இதைத் தொடர்ந்து பொது வெளியில் தனிப்பட்ட அடையாளங்களை மறைக்கும் எந்த ஒரு ஆடையையும் அணிய, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, தடை விதித்தது.

2007ம் ஆண்டிலேயே முழுத்திரைக்கு தடை விதித்திருந்த நெதர்லாந்து பின்னர் இத்தடையை , பொதுப் போக்குவரத்து, பல்கலைக்கழகங்கள் மற்றும் சில குறிப்பிட்ட தொழில்கள் என்று வேறு பல துறைகளுக்கு விஸ்தரித்தது.

உதாரணமாக நீதிமன்ற ஊழியர்கள் “அரச பக்கசார்பின்மை ” என்ற அடிப்படையில் இது போன்ற ஆடைகளை அணியத் தடைவிதிக்கப்பட்டார்கள். மற்றவர்கள் அவர்களது அன்றாட வேலையில் , வருபவர்களுடன் முகத்துக்கு முகம் உரையாட வேண்டிய தேவை இருந்தால், இந்த மாதிரியான ஆடைகளை தவிர்க்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்டார்கள்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மூன்றில்தான் நாடளாவிய புர்கா தடை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பிற நாடுகள் பிராந்திய அளவில் தடைகளை விதித்திருக்கின்றன.

ஸ்பெயினின் பார்சிலோனா நகர் 2010லிருந்து சந்தைகளிலும், பொதுக் கட்டிடங்களிலும், முழு முகத்திரைகள் அணிந்து வருவதைத் தடை செய்திருக்கிறது. டென்மார்க்கில் நீதிமன்ற அறைகளை இந்த ஆடைகள் அணிந்து வரத் தடை இருக்கிறது.

ஜெர்மனியின் ஹெஸ் மாகாணம் முழுமையிலும், இத்தாலியின் பல நகரங்களிலும் தடைகள் இருக்கின்றன. இத்தாலியத் தடைகள் 1970களில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ளன.

சில நாடுகள் வேறு திசையில்

ஆனால் அதே வேளை, சில நாடுகள் தடை என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகிச் சென்றுள்ளன. பல ஆண்டுகளாக இருந்த தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.

துருக்கி பல தசாப்தங்களாக அமலில் இருந்த முகத்திரைத் தடையை 2013ம் ஆண்டில் விலக்கிக்கொண்டது. கல்வி மற்றும் பொதுத்துறைகளில் மத விதிமுறைகளைப் பின்பற்றும் முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு இந்த முகத்திரைத் தடை தடையாக இருக்கிறது என்ற கவலைகள் எழுந்த நிலையில், ஆளும் ஏ.கே கட்சி இந்த முடிவை எடுத்தது.

ஆனால் துருக்கியில் அதிகார மையமாக இருக்கும் மதச்சார்பற்ற குழுக்கள் இது குறித்து கவலைகளைத் தெரிவித்தன. இது பாரம்பரியமாக மதச்சார்பற்ற நாடாக இருந்து வந்திருக்கும் துருக்கியை இஸ்லாம் ஆள்வதற்கு வழிவகுக்கும் முதல் நடவடிக்கை என்று அவர்கள் கூறினர்.

ஆனால் அவர்களின் விமர்சனங்கள் புறந்தள்ளப்பட்டு , விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தலையை மட்டும் மறைக்கும் துணி ( அல்லது ஹிஜாப்) போடுவது அனுமதிக்கப்பட்டது. ஆனால் முழு உடலையும் மறைக்கும் ஆடைகள் இன்னும் தடை செய்யப்பட்டுள்ளன.

சிரியாவும் 2011லிருந்து ஆசிரியைகளை முகத்தை மறைக்கும் நிக்காப் என்ற திரை அணிய அனுமதித்திருக்கிறது. இதற்கு முன்பு, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு ஆளாகிவிடுவார்களோ என்ற கவலை அதிகரித்து வந்த நிலையில் , உயர்கல்வி அமைச்சர் நாட்டின் பல்கலைக்கழகங்களில் இது போன்ற முகத்திரைகளுக்குத் தடை விதித்திருந்தார். அது இப்போது ரத்து செய்யப்பட்டது.

துனிசியாவும் 2011 ஜனவரியிலிருந்து தலையங்கி அணிவதற்கு இருந்த தடையை விலக்கிக்கொண்டது.

அதற்கு முன்னர் வரை, ஹிஜாப்புகள் அணிவதற்கு எதிராக வீதிகளிலேயே கடுமையான பிரசாரம் இருந்தது. ஹிஜாப் அணிந்த பெண்கள் போலிசாரால் தடுக்கப்பட்டு , தலையங்கிகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டனர். இது மாதிரி அங்கிகள் ‘மதக்குழு’வாதத்தைக் காட்டுவதாக அரசால் கருதப்பட்டது.

(பிபிசி தமிழ்)

Share This Post

Post Comment