விபத்தினால் மாண்ட உயிர் ஊர்வலங்களால் மீண்டு வராது : முதலமைச்சர்

விபத்தினால் மாண்ட உயிர் ஊர்வலங்களால் மீண்டு வராது : முதலமைச்சர்
கடந்த கால போரினால் வீதிகள் குன்றும் குழியுமாக காணப்பட்டமையினால் வாகனங்களை மெதுவாக செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் தற்போது போர் மேகங்கள் களைந்து சென்று அமைதிச் சூழல் ஏற்பட்டதால் வீதிகள் திருத்தப்பட்டு காப்பெற் வீதிகளாக்கப்பட்டு அளவுக்கதிகமான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதனால் தொடர் விபத்துக்கள் ஏற்படுகின்றது என வடக்கு முதல்வர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று வீதி பாதுகாப்பு கருத்தரங்கு ஒன்று யாழ்.கிறீன் கிறாஸ் விடுதியில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
விபத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களை அவதானிப்போமானால் சாரதிகளின் கவனயீனமா? அல்லது பாதசாரிகளின் கவனயீனமா? என்பதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. வீதி விபத்துக்களுக்கான முக்கிய காரணங்களாக, கைபேசிப்பாவனையுடன் வாகனத்தைச் செலுத்துதல், வாகனத்தின் அதிவேகம், குடிபோதையில் வாகனத்தைச் செலுத்துதல், வாகனங்களுக்கிடையே போட்டி போன்ற பற்பல காரணங்கள் அமைகின்றன.
;இன்றைய புள்ளிவிபரத்தின் படி இலங்கையில் தினமும் 5000 புதிய தயாரிப்பு கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. இதேநிலைமை தொடருமாயின் எதிர்காலத்தில் வாகனங்கள் செலுத்துவதற்கு வீதிகள் காணப்படாது, இலங்கையின் பிரதான வீதிகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கவே போதுமானதாக அமையும்.
அதுமட்டுமல்ல மக்களுக்கு வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவை புகட்ட வேண்டும். கூடுதலாக பாடசாலை மட்டத்தில் கூடுதலான கவனம் தேவைப்படுகின்றது. வீதி விபத்துக்களில் சிக்குண்டு உயிர் போன பின்னர் ஊர்வலங்கள்,போராட்டங்கள் என்பன போன உயிர்களை மீட்டுத் தரப்போவதில்லை.
குறிப்பாக வீதி விபத்துக்களுக்கு வாகனப் போட்டி பிரதான காரணியாக அமைகின்றது. ஆகவே பொலிஸார் வாகனப் போட்டியில் ஈடுபடுவோரின் வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய வேண்டும். போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸார் வாகனங்களின் குறைகளை கவனியாது விட்டால் அது சமூகத்தில் பாரிய உயிர்ப்பாதிப்பை ஏற்படுத்துவதற்கு துணைபோவதாக அமையும், என்ற உண்மையை உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.
(யாழ் உதயன்)

 

Share This Post

Post Comment