அகதி முகாம்களிலே அல்லல்பட்டுக் கொண்டிருந்த மூன்று இலட்சம் சகோதரர்களை குடியேற்றியது போல் இடம்பெயர்ந்து வாழும் ஒரு இலட்சம் முஸ்லிம்களையும் மீள் குடியேற்றுவதே தனது பொறுப்பு என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வன்னி மாவட்ட எம்.பிக்களை கெளரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்று கெளரவிக்கும் நிகழ்வு வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் நேற்று மலை 4.00 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுகவீனம் காரணமாக எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உண்மையி லேயே நீண்ட காலத்திற்கு பின் பல கட்சிகள் இங்கே ஒன்று கூடியிருக்கின்றன.
வட மாகாணத்தில் ஒரு அலுவலகத்தை எங்கே அமைக்கலாம் என்று ஜனாதிபதியோ பிரதமரோ கேட்டால் நான் வவுனியா வைத்தான் சொல்வேன். வவுனியா மூன்று இலட்சம் தமிழ் சகோதரர்கள் அகதியாக வந்த போது கைகொடுத்த மாவட்டம். யுத்தத்தின் காரணமாக தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக வந்தபோது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் உணவளித்திருந்தார்கள். அவ்வாறாக இன்பத்திலும் துன்பத்திலும் தன்னை அர்ப்பணிக்கின்ற மாவட்டமாக வவுனியா மாவட்டம் இருக்கிறது.
நாங்கள் அரசியல்வாதிகளாக முரண்பட்ட அறிக்கைகளை விடுத்திருந்தாலும் இன்று ஒன்றாக இருக்கிறோம். அவரவர் சார்ந்த சமூகத்தின் உரிமைக்காக அவர்கள் பேசவில்லையென்றால் தெரிவு செய்த மக்களுக்கான நன்றிக் கடனை செலுத்த முடியாது. நான் தமிழர்களின் விரோதியல்ல சிலர் என்னை தமிழர்களின் விரோதியாக காட்டுகிறார்கள்.
சிலர் சிங்களவரின் விரோதியாக என்னை காட்டுகிறார்கள். ஆனால் யாருக்கும் நான் விரோதியல்ல நானும் கடந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்டவன்.
ஐந்து வருடங்களாக புனர்வாழ்வு அமைச்சராக இருந்தீர்கள் ஏன் முஸ்லிம்களை குடியேற்றவில்லை என்று தன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். ஐந்து வருடங்களில் நாலரை வருடங்கள் நாட்டில் சமாதானம் இருக்கவில்லை.
ஆறு மாதங்கள் தான் சமாதானம் இருந்து. முகாமிலே தத்தளித்துக்கொண்டிருந்த மூன்று இலட்சம் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யாமல் இருபத்தையாயிரம் முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்திருந்தால் நான் ஒரு மனிதனாக இருக்க முடியாது.
தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம் முற்றுப்பெறவில்லை. ஆனால் அதை செய்யும் கடமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் எனக்கும் மாகாண சபைக்கும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ளது.
அதேபோல் அகதிகளாக இருக்கும் ஒரு இலட்சம் முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்யும் பொறுப்பு எனக்கு இருப்பதைப் போல் வடமாகாண சபைக்கும் இருக்கிறது என்பதனை மனச்சாட்சியுள்ள அத்தனை பேரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறுபான்மையினருக்கான தீர்வுகளை இழுத்தடிக்கும் யுக்தியாகவே தமிழர்களும் முஸ்லிம்களும் மோத வைக்கப்படுவதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான நா. சிவசக்தி ஆனந்தன். செல்வம் அடைக்கலநாதன். சாந்தி சிறிஸ்கந்தராஜா, வைத்திய கலாநிதி சிவமோகன், காதர் காசிம் மஸ்தான் மற்றும் வட மாகாண சுகா¡ர அமைச்சர் பா. சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
(யாழ் உதயன்)