பாரிஸில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று ஒரு வாரமாகி விட்டது. இத்தாக்குதல்களால் பாரிஸ் மட்டும் அல்ல, பிரான்ஸ் முழுவதுமே உறைந்து போனது.
அச்சத்திற்கும் பீதிக்கும் உள்ளாகியுள்ள மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என உள்ளூர்வாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிகிழமை நடைபெற்ற கொடுரமான தாக்குதல்களை அடுத்து, நாடு முழுவதும் 3 மாதங்களுக்கு அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து குடியிருப்புக்களில் அதிரடிச் சோதனை நடத்துவதற்கு காவல்துறைக்கு அதிகாரங்கள் கிடைத்துள்ளன.
நாட்டின் எல்லைப் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொதுக் கூட்டங்கள் மற்றும் வீதிகளில் மக்கள் ஒன்று கூடுவதற்கு தடைகள் விதிக்கப்பட்டு, கெடுபிடிகளும் நிலவுகின்றன.
பாரிஸ் பிரதான வீதிகளில் குறைந்த அளவிலான நடமாட்டத்தையே காணமுடிவதாக உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மக்களை மேலும் ஒரு அச்ச சூழலுக்குள் தள்ளக் கூடும் என, அங்கிருக்கும் பிபிசின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இவ்வாறான ஒரு சூழலில், பாரிஸ் நகரில் பொதுப் போக்குவரத்துக்கள் இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை எனவும், கல்வி நிலையங்களுக்குச் சென்ற பிள்ளைகள் பாதுகாப்பாக வீடு திரும்பி வரும் வரை தாம் பயந்து கொண்டிருக்கும் சூழலே தற்போது அங்கு உள்ளதாக ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி ரவீந்திரா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு பிறகு அங்கு அகதிகளாக உள்ளவர்களுடன் உள்ளூர் மக்கள் முன்னரைப் போல சகஜமாகப் பழகுவது குறைந்துள்ளது என பிபிசி தமிழோசையிடம் கூறிய இலங்கை அகதியாக கோபிநாத், தம்மைப் போன்றவர்கள் மீதான சோதனை கெடுபிடிகளும் அதிகரித்துள்ளன எனவும் கூறினார்.
(பிபிசி தமிழோசை)