மாலி ஹோட்டலில் சிறப்புப் படையினர் புகுந்தனர்!

மாலி ஹோட்டலில் சிறப்புப் படையினர் புகுந்தனர்!

இஸ்லாமிய துப்பாக்கிதாரிகள் 170 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்துள்ள ,மாலி தலைநகர் பமாகோவில் உள்ள சர்வதேச ஹோட்டல் ஒன்றில் மாலி சிறப்புப் படையினர் நுழைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மூன்று பணயக் கைதிகள் இதுவரை கொல்லப்பட்டிருக்கின்றனர்.

ஹோட்டலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மாலி உள்துறை அமைச்சர் மேஜர் கர்னல், சலிஃப் ட்ரவோர்,தற்போது சிறப்புப் படையினர் ஹோட்டலில் அறை அறையாக சென்று சோதனை நடத்திக்கொண்டிருக்கின்றனர் . ஹோட்டலின் எல்லா வெளியேறும் வாயில்களும் மூடப்பட்டுவிட்டன, பணயக் கைதிகளைப் பிடித்து வைத்திருப்பவர்கள் யாரும் தப்பமுடியாது என்றார்.

சுமார் 80 பணயக்கைதிகள் இதுவரை தப்பிவிட்டனர் அல்லது விடுவிக்கப்பட்டனர் என்று அரச தொலைக்காட்சி கூறுகிறது.

முற்றுகை இடப்பட்டிருக்கும் ராடிசன் ப்ளூ ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் பிரான்ஸ், துருக்கி, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நெருக்கடியைத் தீர்க்க தன்னால் என்ன செய்ய முடியுமோஅதைச் செய்துவருவதாக, இந்த ஹோட்டலைச் சுற்றித் தனது துருப்புகளை நிறுத்தியுள்ள பிரெஞ்சு அரசு கூறுகிறது.

இஸ்லாமியக் குழு

துப்பாக்கிதாரிகள் இந்த ஹோட்டலுக்குள் தூதரக அலுவலர்களின் வாகங்களுக்குத் தரப்படும் எண்-பலகை பொருத்திய வாகனம் ஒன்றில் வந்தனர்.

இஸ்லாமிய கோஷங்களை எழுப்பியவாறே அவர்கள் ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.

இந்தத் தாக்குதலில் தப்பிய இந்த ஹோட்டலில் தங்கியிருக்கும் ஒருவர், ஹோட்டலின் வரவேற்புக் கூடத்தின் தரையில் துப்பாக்கி குண்டுகளைப் பார்த்ததாகக் கூறினார்.

மாலியின் வட பகுதியில் இருக்கும் இஸ்லாமியக் குழுக்கள் இரண்டாண்டுகளுக்கு முன்னர் நாட்டை அதிரடிப் புரட்சியின் மூலம் கைப்பற்ற முயன்றனர். அப்போது பிரெஞ்சுப் படையினரின் தலையீட்டால் அது தடுக்கப்பட்டது.

இந்தியர்கள் நிலை

இதனிடையே, இந்த ஹோட்டலில் தங்கியிருக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று மாலியில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் பிபிசிக்குத் தெரிவித்தன.

இங்கு தங்கியிருக்கும் இந்தியர்கள் அனைவரும் ஒரு தனியார் நிறுவனத்துக்காக வேலைசெய்பவர்கள் என்றும், அவர்கள் இந்த ஹோட்டலின் பிரதானப் பகுதியிலிருந்து ஒதுக்குப்புறமான வேறொரு கட்டிடத்தில் இருக்கிறார்கள் என்றும் அவர்களுடன் தூதரகம் தொடர்பில் இருப்பதாகவும் , இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

மாலியில் சுமார் 200 இந்தியர்கள் இருக்கிறார்கள்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment