முஸ்லீம் பெரும்பான்மை நாடுகள் ஐ.எஸ் அமைப்பை நோக்கும் விதம்!

முஸ்லீம் பெரும்பான்மை நாடுகள் ஐ.எஸ் அமைப்பை நோக்கும் விதம்!

இஸ்லாமிய அரசு அமைப்பை உலகில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகள் எதிர்மறையாகவே பார்க்கின்றன என்று ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ஒரே ஒரு நாடுதான் விதிவிலக்கு.

இஸ்லாமிய அரசு என்ற அமைப்பை, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் வசிக்கும் மக்கள் பொதுவாக எதிர்மறையாகவே பார்க்கிறார்கள் என்று சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

ப்யூ ஆராய்ச்சி மையத்தின் உலக மனோபாவங்கள் குறித்த ஆய்வு ஒன்று பாலத்தீன நிலப்பரப்புகள், ஜோர்டான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தீவிரவாத அமைப்பை நிராகரிக்கிறார்கள் என்று காட்டியது. அதேபோல இஸ்ரேலில் வசிக்கும் அரேபியர்களில் 91 சதவீதத்தினர் சாதகமற்ற கருத்தையே கொண்டிருக்கின்றனர்.

லெபனானில் இந்த அமைப்புக்கு எதிரான கருத்து ஏறக்குறைய 100 சதவீதத்துக்கு நெருக்கமாகவே இருக்கிறது. இந்த ஆய்வு சமீபத்தில் பெய்ரூட்டில் நடந்த குண்டுத்தாக்குதல்களுக்கு முன்னர், 2015 வசந்த காலத்தில் நடத்தப்பட்ட நிலையிலும்கூட இந்த கருத்துணர்வு அப்படி இருந்திருக்கிறது.

லெபனானில் இந்த ஆய்வில் கலந்து கொண்ட ஏறக்குறைய எல்லா கிறித்தவர்களும், ஷியா பிரிவு முஸ்லீம்களும் இஸ்லாமிய அரசு அமைப்பைப் பற்றி எதிர்மறையான கருத்தையே கொண்டிருந்தார்கள். அதே போல சுன்னி லெபனானியர்களிலும் கூட 98 சதவீதத்தினர் அந்த அமைப்பை ஆதரிக்கவில்லை.

இஸ்லாமிய அரசு அமைப்புக்கு மிகவும் பலமான ஆதரவு நைஜீரியாவில் இருந்துதான் வந்திருக்கிறது. ஐ.எஸ் அமைப்பின் துணை அமைப்பாகச் செயல்படும், இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான, போக்கோஹராம் 2009 ஆண்டிலிருந்து அந்த நாட்டில் குறைந்தது 17,000 பேரைக் கொன்றிருக்கிறது, பல லட்சம் பேர்களை இடம் பெயரச் செய்திருக்கிறது என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு கூறும் நிலையிலும், நைஜீரியாவில் அந்த அமைப்புக்கு ஆதரவாகவே இருக்கிறது.

சுமார் 14 சதவீத நைஜீரியர்கள் இந்த அமைப்பைப் பற்றி சாதகமான கருத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு வேளை ஆச்சரியப்படத்தக்கவகையில், இந்த சாதகமான கருத்தைத் தெரிவித்தவர்களில் 7 சதவீதம் பேர் நைஜீரிய கிறித்தவர்களும் அடங்குவர்.

முன்பு பிபிசியால் நடத்தப்பட்ட ஒரு கருத்தறியும் ஆய்வில், நைஜீரியாதான் மிகவும் மதச்சிந்தனை உள்ள நாடுகளில் ஒன்று என்று தெரிந்தது என்று கூறும் பிபிசியின் ஹாசா மொழிப்பிரிவுத் தலைவர் மன்சூர் லிமான், இதுதான் அந்த நாட்டில் மத ரீதியான தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் இருப்பதை விளக்குகிறது என்கிறார்.

“நைஜீரியாவில் பலருக்கு ஐ.எஸ் அமைப்பு என்ன செய்கிறது என்பது குறித்த தெளிவு இல்லை , அவர்கள் ஐ.எஸ் குறித்து வெளிவரும் செய்திகளில் பெரும்பாலானவை, இஸ்லாத்தைப் பற்றி மேற்குலகின் பார்வையால் விளைகிறது என்று கருதுகிறார்கள்”, என்று அவர் கூறினார்.

ஆனால் பாகிஸ்தானில் ஐ.எஸ் பற்றி நிலவும் கருத்து தனித்து நிற்கிறது.

பாகிஸ்தானியர்களில் ஒன்பது சதவீதத்தினரே ஐ.எஸ் பற்றி சாதகமான கருத்துணர்வைக் கொண்டிருந்தாலும், 62 சதவீதத்தினர் இன்னும் அந்த அமைப்பு குறித்து முடிவெடுக்காமல் இருக்கின்றனர்.

இது போல அந்த அமைப்பைப் பற்றி இன்னும் முடிவுக்கு வராமல் இருப்பவர்களில் பெரிய அளவினர் ஐ.எஸ் அனுதாபிகளாகவோ அல்லது ஆதரவாளர்களாகவோ இருக்கக்கூடும் என்கிறார் பிபிசி உருது மொழிப்பிரிவின் ஹாரூன் ரஷீத்.

“இப்போதெல்லாம், பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு கஷ்டமான காலம், ஏனென்றால் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே பெயர் சொல்லாத நிலையில் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதிக்கும் ஒரு கருத்தறியும் வாக்கெடுப்பில் கூட, அவர்கள் தங்களை ஐ.எஸ் ஆதரவாளர்கள் என்று வெளிப்படுத்திக்கொள்ள விரும்பியிருக்கமாட்டார்கள்”, என்கிறார் ஹாரூன் ரஷீத்.

இது குறித்து என்ன கருத்து சொல்வது என்ற நிச்சயமான நிலையை எடுக்க முடியாதவர்கள் கூட, இஸ்லாமிய அரசு திடீரென்று வளர்வது குறித்தும், களத்தில் அது பெற்றுவரும் வெற்றிகள் குறித்தும் சந்தேகத்துடனேயே இருப்பார்கள் என்றார் அவர்.

“ஐ.எஸ் அமைப்பை யார் வளர்த்தார்கள் , அதன் வேகமான முன்னேற்றத்துக்கு யார் வழி வகுத்தனர் ? ஆப்கானிஸ்தானில் நடந்ததன் பின்னணியில் சர்வதேச சக்திகள் இருக்கும் நிலையிலும், ஆப்கானிஸ்தான் தாலிபானின் வளர்ச்சிக்கு பாகிஸ்தான் போன்ற சக்திகள் ஆதரவு தரும் நிலையிலும், இதே போல ஐ.எஸ் அமைப்பையும் வேறு ஏதோ ஒரு சக்தி அதன் சொந்த நோக்கத்துக்காக வளர்த்தெடுக்கிறது , பயன்படுத்திக்கொள்கிறது என்ற பொதுவான சந்தேகம் இருக்கிறது”.

அதே போல இந்த மிகச்சமீபத்திய கொடூரத் தாக்குதல்களின் பின்னணியில் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது. இதுதான் பாகிஸ்தானியர்கள் மனதில் இருக்கும் முடிவெடுக்கமுடியாத நிலைக்கும் ஒரு காரணமாக இருக்கலாம்” என்கிறார் அவர்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment