நேபாளத்தில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி

நேபாளத்தில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி

நேபாளத்தின் புதிய அரசியலமைப்புக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் தென்கிழக்கு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

போக்குவரத்தை தடுக்கும் விதமாக நெடுஞ்சாலையில் அமைதியாக அமர்ந்திருந்தவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக போராட்டக்காரர்களின் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளையும் கற்களையும் பாதுகாப்பு படையினர் மீது வீசியதாக காவல்துறை கூறுகின்றது.

நேபாளத்தில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்ட கடந்த செப்டம்பர் மாதம் முதல் நடந்துள்ள வன்முறைகளில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவுடன் நெருங்கிய கலாசாரத் தொடர்புகளைக் கொண்ட மாதேஸி சமூகத்தை சேர்ந்தவர்களே அவர்களில் பெரும்பாலானவர்கள்.

புதிய அரசியலமைப்பு மூலம் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகள் காரணமாக மருத்துவமனைகளில் அடிப்படை மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தலைநகர் காத்மண்டுவில் உள்ள மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மாதேஸி சமூகத்தினருக்கு இந்தியா ஆதரவளித்து வருவதாலேயே போக்குவரத்து தடை மிகவும் தீவிரமடைந்துள்ளதாக நேபாளம் குற்றம்சாட்டுகின்றது. இந்திய அரசு அதை மறுக்கின்றது.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment