பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்டிருந்த மூன்றாவது தற்கொலை குண்டுதாரியின் படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
அந்த தற்கொலை குண்டுதாரி பாரிஸின் தேசிய கால்பந்து விளையாட்டு அரங்கில் தாக்குதலை நடத்தியவர் என பிரெஞ்ச் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் வெளியிட்டுள்ள தற்கொலை குண்டுதாரியின் படம் எம் அல் மஹ்மூத் எனும் நபருடையது என பிபிசி அறிகிறது.
இப்போது படம் வெளியாகியுள்ள நிலையில், அத்தாக்குதல் தொடர்பிலான சாட்சிகளை முன்வருமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.
அந்த நபர் சிரியாவிலிருந்து துருக்கி வழியாக கிரேக்கத் தீவான லெரோஸுக்கு கடந்த மாதத்தின் முற்பகுதியில் நுழைந்து பின்னர் மற்றொரு தாக்குதலாளியான அஹ்மட் அல் மொஹமட்டுடன் பிரான்ஸுக்கு வந்தார் என்று கருதப்படுகிறது.
கிரேக்கத்திலிருந்து பிரான்ஸுக்கு, ஐரோப்பாவுக்கு குடியேறிகள் வரும் பாதையை இவர்கள் பயன்படுத்தியுள்ளது போலத் தோன்றுகிறது எனக் கூறப்படுகிறது.
இந்த இருவரும் வேறு நான்கு பேருடன் ஒரு குழுவாகப் பயணித்தினர் என்றும், மற்றவர்கள் எங்குள்ளனர் என்பது இதுவரை தெரியவில்லை என்று கிரேக்கத் தலைநகர் ஏதன்ஸிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
(பிபிசி தமிழோசை)