பெல்ஜியத்தில் காவல்துறையினர் தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், பாரிஸ் தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான சலா அப்தஸ்லாம் இன்னும் சிக்கவில்லை.
பிரஸ்ஸல்ஸ் நகரில் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்ற எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கடைகளும் பள்ளிக்கூடங்களும் நகர போக்குவரத்து கட்டமைப்பும் இன்றும் இயங்கவில்லை.
இதனிடையே, பாரிஸ் நகரில் பிரான்ஸ் அதிபரை பிரிட்டிஷ் பிரதமர் சந்தித்து பேச்சுநடத்தியுள்ளார்.
ஐஎஸ்-க்கு எதிரான போரில் மேலும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதாக இருவரும் உறுதியளித்துள்ளனர்.
இதனிடையே, பெல்ஜியத்தின் தலைநகரில் இயல்புநிலையை விரைவில் கொண்டுவருவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷார்ல் மிஷேல் தெரிவித்துள்ளார்.