அரச சார்பற்ற நிறுவனங்கள் குறித்து வட மாகாண முதல்வர்!

அரச சார்பற்ற நிறுவனங்கள் குறித்து வட மாகாண முதல்வர்!
போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அரச பயங்கரவாத செயற்பாட்டு நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்பவே அரச சார்பற்ற நிறுவனங்கள் கடமையாற்ற வேண்டிய ஒரு கட்டுப்பாடு அல்லது பயமுறுத்தல் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு முகம் கொடுக்கத் தேவையற்ற அல்லது மறுத்துரைக்கக்கூடிய சக்திகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நிறுவனங்களும் , சர்வதேச தொண்டு நிறுவனங்களுங் கூட தலையாட்டிப் பொம்மைகளாக அப்போதைய அரசாங்கத்திற்கு இசைந்து சென்றமை அரசுக்கு மேலும் வலுவூட்டியது இவ்வாறு வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் 25ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்றைய தினம் காலை நடத்தப்பட்ட இணையத்தின் எதிர்கால முன்நோக்கிய நகர்வு என்ற கருப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
வடக்கில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் அளப்பெரிய சேவையினை ஆற்றிய உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் கொலை, அச்சுறுத்தல், காணாமற் போகச் செய்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் முடக்கப்பட்டன.
போர் நிகழ்வதற்கு முன்பு வன்னிப் பகுதியில் இருந்து அனைத்துத் தொண்டு நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டமை. அழுகுரல்களுக்கு மத்தியிலான மக்களது கோரிக்கைகள் எதனையும் கருத்திற்கொள்ளாது வெளியேறிய கண்காணிப்புக் குழுக்கள், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் ஆகியன அரசின் கொன்று குவிப்பு நாடகத்திற்கு களம் அமைத்து கொடுத்ததாகவே கூறப்படுகிறது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபை தெரிவு செய்யப்பட்ட பின்னர் அன்று தொடக்கம் இன்று வரையில் வடமாகாண மக்களுக்கு மேம்பாடான செயல்களை எவ்வாறு இந்த அரசசார்பற்ற நிறுவனங்களின் ஊடாகப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பது பற்றி நான் பலமாக சிந்தித்து வந்திருக்கின்றேன்.
காரணம் அரசாங்கத்திற்கு அனுசரணையாக தனியார் துறையும், அரச சார்பற்ற நிறுவனங்களும் சேவையாற்ற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அரசாங்கத்தால் மக்களுக்கான சகல நன்மைகளையும் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அத்தியாவசிய சேவை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவே அரசாங்கத்திற்கு நிதிப் பற்றாக்குறைகளும் ஆளணிப் பற்றாக்குறைகளும் இருப்பதை நாம் யாவரும் அறிவோம்.
அதேநேரத்தில் வடமாகாணத்தில் எண்ணற்ற அரசசார்பற்ற நிறுவனங்கள் இயங்குகின்ற போதிலும் அவற்றின் செயற்பாடுகள் எவ்வளவு தூரம் இங்குள்ள மக்களுக்கு நேரடியான உரிய பயன்களைத் தரக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றன என்ற விடயம் தொடர்பில் எனக்கு கூடுதலான ஐயப்பாடுகள் உள்ளன.
காலத்திற்கு காலம் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல வேலைத்திட்டங்களை தாமாகவோ அன்றி மத்திய அரசின் வழிகாட்டலின் கீழோ ஆரம்பித்து நிறைவுறுத்துவதாகத் தெரிய வருகின்றது. எமக்கு இவை பற்றி விபரங்கள் தெரியப்படுத்தப்படுவதில்லை.
அதே போல் ஈற்றில் இவற்றின் செயற்பாடுகளால் மக்களுக்கு எஞ்சும் நன்மைகளோ மிகமிகக் குறைவு. இதனை இங்கு நான் யாரையும் குறை கூறுவதற்காகவோ அல்லது அவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்காகவோ கூறவில்லை.
மாறாக இன்று எங்கள் மாகாணத்தில் இயங்கும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் மத்திய அரசின் பல கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிகாட்டலிலேயே இயங்குகின்றன என்பதே உண்மை.
அவ்வாறு இயங்காத அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசின் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்களின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் கனகச்சிதமாக முன்னெடுத்ததையும் நாங்கள் கடந்த காலத்தில் கண்டுள்ளோம். இன்று நிலைமை சற்று சீரடைந்திருந்தாலும் எந்தளவுக்கு என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறான கட்டுப்பாடுகளுக்கு அமைய சர்வதேச நியதிகளின் பிரகாரம் சர்வதேசத்துடன் தொடர்புபட்டு எமது இருப்பின், எமது வாழ்க்கையின், யதார்த்தத்தினை உலகறியச் செய்ய, வினைத்திறன் மிக்க சமூகக் கட்டமைப்பு, அவற்றின் சிறப்பான செயற்பாடுகள் என்பன அவசியமானதும் சமகாலத் தேவையும் ஆகின்றன.
வெளிநாட்டு, உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏதோ ஒரு விதத்தில் நிதி வழங்கும் நிறுவனங்களிலும் அரச அலகிலும் இன்னமும் கட்டுண்டே கிடக்கின்றன. இவ்வாறு அவற்றின் கட்டுப்பாடுகளின் கீழ் நெறிப்படுத்தல்களின் கீழ் சேவையாற்ற முனைவதில் எந்த அளவுக்குப் பயன் கிடைக்கும் என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது.
இந்நிறுவனங்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து சிறப்பான செயற்பாடுகளினை நடைமுறைப்படுத்துவதற்கு அமைப்பு ரீதியான புதிய தயார்ப்படுத்தல்களை வடமாகாணசபையின் ஒப்புதலுடனும் வழிகாட்டலுடனும் மேற்கொள்ளுகின்ற போது எமது செயற்பாடுகள் இலகுவாக்கப்படலாம் என்று நம்புகின்றேன். பயன் நிறைந்ததாக்கப்படலாம் என்றும் நம்புகின்றேன்.
எது எப்படி இருப்பினும் கடந்த நீண்ட கால போரில் மிகப் பெரிய பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்டு மீள வகை தெரியாது அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு உடனடி நிவாரணங்களுக்கு மேலதிகமாக நிரந்தர வருவாய் ஈட்டக்கூடிய விதத்தில் முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக செயற்படுத்த முடியுமா? என்பது எமது முக்கிய ஒரு எதிர்பார்ப்பாக உள்ளது. திட்டங்களை இலகுவாகவும் அவற்றிற்குரிய நிதி வளங்களை இலகுவாகவும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமா? என்பது இன்னொரு கேள்வி.
வெளிநாட்டில் இருந்து நிதி வளங்களை எமக்கு வழங்குவதற்கு பலரும் முன்வருகின்றனர். எனினும் இந் நிதிகளை நேரடியாகப் பெற்றுக் கொள்வதற்கு முதலமைச்சர் நிதியத்தை அறிமுகம் செய்வதில் எமக்குச் சில தடைகள் காணப்படுவதால் இவ்வாறான உதவிகளை நேரடியாக பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அல்லது விரும்பாத நிலையில் இந்நிதி மூலங்களை அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாகப் பெற்று எமது மக்களுக்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயப் பரப்புகள் ஊடாக உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் சுய முயற்சிகளை அல்லது நிதியீட்டற் செயற்பாடுகளைச் சீர்செய்ய முடியும் என்று நம்புகின்றேன்.
எனினும் இவ்வாறான செயற்திட்டங்களை எந்த அரச சார்பற்ற நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்வது, இவ்வாறான அரச சார்பற்ற நிறுவனங்களை பயன்படுத்துகின்ற போது அவற்றிற்கான நிர்வாகச் செலவீனங்கள் குறித்தொதுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் மொத்த நிதியின் எத்தனை வீதமாக இருக்கும் என்ற பல விடயங்கள் ஆராயப்படவேண்டி உள்ளன.
சில அரச சார்பற்ற நிறுவனங்களின் நிர்வாகச் செலவீனங்கள் மொத்த நிதி ஒதுக்கீட்டின் 62 வீதத்திற்குற்குங் கூடுதலாக இருந்துள்ளதைப் பல சந்தர்ப்பங்களில் அவதானித்துள்ளேன். இது தெருத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு அடித்த கதையாக மாறிவிடுகிறது.
இந்நிலையில் தான் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் இணையத்தின் உதவி எமக்குப் பெரிதும் வேண்டப்படுகின்றது. நேர்மையாகவுஞ் சிறப்பாகவும் செயற்படக் கூடிய அரச சார்பற்ற நிறுவனங்களை இனங்காணுவதற்கு இவ் ஒன்றியம் எமக்கு உதவியாக இருக்கும் என கருதுகின்றேன்.
ஒரு நாட்டில் அல்லது நாட்டின் ஒரு பகுதியில் அழிவுகள் அல்லது பேரவலங்கள் ஏற்படுகின்ற போது அந் நாட்டிற்கு அல்லது அந்தப் பகுதிக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் படை எடுத்துச் செல்வதும் அவர்களின் வேலைத்திட்டங்கள் பல சீரற்ற விதத்தில் தமது பொருள் ஈட்டத்தையே முன்னிலைப்படுத்துவதும் அவதானிக்கக் கூடியதாக உள்ளன என்றார்.
(யாழ் உதயன்)

Share This Post

Post Comment