இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதற்கு எதிராக குரல் கொடுத்து வருவோரின் பட்டியலில் இணைந்துள்ள இந்தித் திரையுலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான ஆமிர்கானின் செயல் தவறல்ல என்று கூறி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தானும் கூட சமீபத்தில் இது போன்ற சகிப்பின்மை போக்கினால் பாதிப்புக்கு உள்ளானதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் சில முஸ்லிம் மதக்குழுக்கள் தன் மீது “ஃபட்வா” எனப்படும் மத ஆணை பிறப்பித்திருந்ததை அவர் அப்போது சுட்டிக்காட்டினார்.
உலக பிரசித்தி பெற்ற இரானியத் திரைப்பட இயக்குனர் மஜீத் மஜிதி இயக்கத்தில் உருவாகியிருந்த முஹம்மது: மெசஞ்சர் ஆஃப் காட் என்கிற படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த காரணத்திற்காகவே அவர் உள்ளிட்டோர் மீது இந்த தடை உத்தரவு பிறபிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு அப்படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கவும் முஸ்லிம் மதக்குழுக்கள் கோரியிருந்தனர்.
ஒரு சில வெறுப்புணர்ச்சியை வெளிக்காட்டும் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.
வன்முறையை வெளிக்காட்டாத எதிர்ப்பு முறை என்பது ஜனநாயகத்தில் தவறு கிடையாது என்றும், அகிம்சை முறையில் போராடுவது சரியான வழிக்காட்டுதல் தான் என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து வெளியிட்டுள்ளார்.
காந்தியின் தேசத்தில் இது போன்ற அகிம்சை முறையிலான போராட்டத்தை குறை கூறுவது தான் தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் நாட்டில் விருதுகளை திரும்ப அளிப்பது உள்ளிட்ட, எதிர்ப்புகளை அகிம்சை முறையில் வெளிக்காட்டும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானது தான் எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
(பிபிசி தமிழோசை)