கடுமையான குற்றம் செய்த கைதிகளுக்கு விடுதலை கிடையாது!

கடுமையான குற்றம் செய்த கைதிகளுக்கு விடுதலை கிடையாது!

இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களில், கடுமையான குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகியிருப்பவர்கள் பிணையில் செல்லவோ அல்லது விடுவிக்கப்படவோ மாட்டார்கள் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள 204 பேரில், 59 பேர் கடுமையான குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகாதவர்கள் எனவும், அவர்கள் தொடர்பில் மட்டுமே இலகுவான நடவடிக்கைகளை எடுக்க அரசு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இவ்வாறு சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 56 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேலும் 124 பேர் தொடர்பில் வழக்கு விசாரணையில் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது வரை, கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் 39 பேர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 20 புனர்வாழ்வுக்கு பின்னர் விடுதலை செய்யப்படவுள்ளனர் எனவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கையில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், பல ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டுமென்று தமிழ்க் கட்சிகள் கோரிவரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment