வன்முறையை மற்றும் பகைமையை நியாயப்படுத்த கடவுளின் பெயரைப் பயன்படுத்தப்படக் கூடாது என கத்தோலிக்கத் திருத்தந்தையான போப் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
கென்யத் தலைநகர் நைரோபியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இளையவர்கள் மனதில் தீவிரவாதப்போக்கு விதைக்கப்படக் கூடாது என தெரிவித்த அவர், மதங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் கோரினார்.
ஐந்து நாள் சுற்றுப்பயணமாக, முதல் தடவையாக ஆப்ரிக்கா சென்றுள்ள அவர், புதன்கிழமை கென்யாவை சென்றடைந்தார்.
அங்கு பலத்த பாதுகாப்புடன் அரசியல் தலைவர்கள், மததத் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய போப் பிரான்ஸிஸ், ஆப்ரிக்காவில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
அவரது வருகையை எதிர்பார்த்து கடும் மழையையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மக்கள் நைரோபி பல்கலைக்கழக வளாகத்தில் அதிகாலை முதல் காத்திருந்தனர்.
கென்யாவின் கரிஸா பல்கலைக்கழகம் மீதான தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை, இஸ்லாமியவாத தீவிரவாதிகள் சமீபக்காலமாக நடத்தியுள்ளனர்.
கடும் பாதுகாப்பு சவால்களின் மத்தியில் போப் பிரான்ஸிஸ் கென்யா உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கென்ய விஜயத்தின் பின்னர், உகாண்டா மற்றும் கிறிஸ்தவ-முஸ்லிம் மோதல் நிலவிவரும் மத்திய ஆபிரிக்க நாடுகளுக்கு போப் பிரான்ஸிஸ் செல்கிறார்.
(பிபிசி தமிழோசை)