மாவீரருக்கு அஞ்சலி – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

மாவீரருக்கு அஞ்சலி – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு
எமது வீரர்களின்- தியாகிகளின் கதைகளை அடுத்த சந்ததிகளுக்கு பக்குவமாகக் கொண்டு சென்று கையளிப்பதற்காக மாவீரர் நாளான இன்று அனைத்துத் தமிழ் மக்களும் தத்தமது இல்லங்களில் நெய் விளக்கேற்றி போரில் உயிர் நீத்த தமிழ்த் தேசிய இனத்தின் வீர ஆத்மாக்களை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு கோரி வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு கோரியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எவனொருவன் முதலில் தன் நாட்டுத் தேசிய உணர்வை இழக்கிறானோ, அடுத்து அவன் தன் தனிமனித உரிமையை இழக்கிறான்.இந்த உரிமை இழப்பு என்பது அவன் தனது மொழி, கலை, கலாசாரம்,இருப்பிடம், காணி,நிலம், வாழிடம், எல்லாவற்றையுமே குறிக்கிறது.
தத்தமது குடும்பத்தில்- சுற்றத்தில் – சமூகத்தில் உயிர்நீத்த உறவுகளை, அந்தத் குடும்பம், சுற்றம், சமூகம், தனியாகவோ சிறுகுழுவாகவோ, பெரும் கூட்டமாகவோகூடி, நினைவுகூர்ந்து அஞ்சலிப்பது என்பது, அவர்களுக்குள்ள அடிப்படை மனித உரிமையாகும்.ஐக்கிய நாடுகள்ட சபையின் மனித உரிமை சமவாயங்களும் இதனைப் பரிந்துரைக்கின்றன.
எவருக்காகவும், எவருடைய நிர்ப்பந்தங்களுக்காகவும், விருப்பங்களுக்காகவும், ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும்-குடிமகளும் தனக்குள்ள ஜனநாயக ரீதியான வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுத்து ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.
கார்த்திகை 27அன்று அனைத்துத் தமிழ் மக்களும் தத்தமது இல்லங்களில் மாலை 6மணி 05 நிமிடத்துக்கு நெய் விளக்கேற்றி போரில் உயிர் நீத்த தமிழ்த் தேசிய இனத்தின் வீர ஆத்மாக்களை உணர்வபூர்வமாக அஞ்சலிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எனவே இவ்வாண்டு கார்த்திகை 27இல்,எமது வீரர்களின் தியாகிகளின் கதைகளை அடுத்த சந்ததிகளுக்கு பவுத்திரமாக கொண்டு சென்று கையளிப்போம் என்று தமிழ்க் குடிமகனும், குடிமகளும் குனிந்த தலைகளை உயரநிமர்த்தி உறுதி எடுத்துக் கொள்வோமாக என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(யாழ் உதயன்)

Share This Post

Post Comment