உன் அழைப்பிற்கு நன்றி.
====================
-சக்கரவர்த்தி-
இத்தனை அழகாய்
இருப்பிடம் வேறெங்கும்
இருக்குமா தெரியவில்லை.
வேளைக்கு உணவு;
நோய் காணும் முன்னே மருந்து;
யாருக்கு கிடைக்கும் சொல்லுங்கள்.
விரட்டி உயிர் பறிக்கும்
வேட்டையன் இல்லை.
மட்டற்ற கலவிக்கு
சாஸ்த்திரமும் வேண்டியதில்லை.
ஜாலத்தில் கிளர்கிறது
வர்ணங்களால்
வடிவம் கொண்ட உலகு.
உயிர் வாழ்வதுக்குண்டான
அனைத்து உத்தரவாதமும்
உனக்குண்டு.
இத்தனைக்கும் எதிர்மாறாய்
சேறும் சகதியுமாக
நிலையாமையில்
கட்டமைக்கப்பட்டதென்
அழுக்காறு உலகு.
இரையில் பொறி வைத்து
உயிர் பறிக்கும் குரூரம்.
நெளியும் புழுவில்
ஒழியும் முள்
குரல் வளை கிழிக்கும்.
உணவுக்குள் மரணம்
ஒளிந்திருக்கும் சாபம்.
உயிர் காவும் வேட்டையன்
வலை விரிப்பான். வீசுவான்.
ஓடி ஒழிந்து
வாழ்வின் பாதிக்காலம்
மறை முகமாய்
பதுங்கிப் போகும்.
இன்றோ நாளையோ
அடிக்கின்ற
உக்கிர வெயிலில்
வறண்டு போகும்
என் வாழ்விடம்.
பாளம் பாளமாய்
நிலம் பிளக்கும்.
நீறாகும்.
நான் துடிப்பேன்.
துளி நீருக்காய்
திறந்து திறந்து
வான் பார்த்து
என் வாய் மூடும்.
சாவேன்.
கருவாடாவேன்.
என் மரணம்
சூரியனைச் சபிக்கும்.
காலக் காக்கைகள்
என் சாவைக் கொண்டாடும்.
ஆனாலும்….
உன்
கண்ணாடித் தொட்டிக்குள்
நான்
வருவதாக இல்லை.