சடங்கு
-அ.ஜேசுராசா-
மறைந்தும் மறையாத மூத்த எழுத்தாளர்எஸ்.பொ. நினைவாக, அவரது சடங்கு நாவலை எடுத்து இரண்டு நாள்களாக வாசித்தேன். 1966 ஆம் ஆண்டு சுதந்திரன் வாரப் பத்திரிகையில் தொடராக வந்த அந்த நாவல், 1971 இல் கொழும்பு அரசு வெளியீடாக நூல் வடிவில் வெளிவந்துள்ளது. அப்போது வாசித்ததற்குப் பின்னர், நீண்ட இடைவெளியின் பிறகு இப்போதுதான் வாசித்தேன்.
எனக்கு நன்கு பிடித்தது; முக்கியமான நாவல் என்ற உணர்வு. வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய ஐந்து நாள்களுள் கதை நிகழ்ந்து முடிகிறது. கொழும்பில் வேலைபார்க்கும் செந்தில்நாதன் என்னும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான எழுதுவினைஞர், லீவில் யாழ்ப்பாணம் வந்து தங்குகிறார். அவரது நிறைவேறாத பாலியல் தவிப்புடன், அவரைச் சுற்றிய வடமராட்சிப் பிரதேச வாழ்க்கைக்கோலமும் அழகாகப் புனையப்படுகிறது. நாவலில் வரும் செல்லப்பாக்கிய ஆச்சி மறக்க முடியாத பாத்திரம். யாழ்ப்பாணச் சமூக வாழ்வில், குடும்ப அமைப்பின் இயக்கு சக்தியாக உள்ள ஒரு வகைமாதிரிப் பாத்திரம். இப்பாத்திர உருவாக்கத்தில் எஸ்.பொ.வின் ஆற்றல் சிறப்பாக வெளிப்படுகிறது!
திரைப்பட நெறியாளரான அல்ஃவிறட் ஹிச்சொக், தனது திரைப்படங்களில் ஏதோவொரு சிறு காட்சித்துண்டில் தன்னைக் காட்டிக்கொள்வது வழக்கம். சடங்கு நாவலில் தன்னையும் எஸ்.பொ. இவ்வாறு காட்டிக்கொள்வது சுவாரசியமாயுள்ளது. இரண்டு இடங்களில் இதைக் காணமுடிகிறது.
1. ‘மாகோவில் மட்டக்களப்புச் சனங்களும் வந்து மொச்சுப்போடுங்கள்’ என்ற எண்ணத்தில் குருணாகல் தாண்டியதும் இடியப்பச் சரையைக் காலி செய்த அவர் அந்தத் தனிமைச் சுகத்திலே திளைத்து, மூலை ஆசனத்தின் ராஜபோகத்தை அநுபவித்தவாறே, பூனை உறக்கங்காட்டிப் பாதிப் பயணத்தை முடித்து, அனுராதபுரத்திற் கண் விழித்தார்.
‘சிங்களவங்களெல்லாம் இதிலை இறங்கினால், காலை நீட்டிக்கொண்டு கொஞ்ச நேரத்திற்குச் சரியலாம்’ என்ற உள்ளுணர்வுதான் அவருடைய விழிப்பிற்குக் காரணம். ஆனால், செந்தில்நாதனின் எண்ணம் ஈடேற வில்லை. சிங்களப் பிரயாணிகள் பெருந்தொகையாக அங்கு இறங்கியது என்னவோ உண்மைதான். ஆனால், கால்களை நீட்டிச் சரிந்து படுப்பதற்கான வசதி ஏற்படவில்லை. எதிரில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் ஒரு கைக்குழந்தை ‘சொகுசாக’த் தூங்குகின்றது. ‘சீட்’ தொங்கலிலுள்ள ஒட்டில் அவளுடைய கணவன் அமர்ந்திருக்கின்றான்.
“நீங்கள் மட்டக்களப்பிலிருந்தோ?”
“ஓமோம்” – ஆண் பதில் கொடுக்கிறான்.
“மட்டக்களப்பிலை இருந்தெண்டால் பிரயாணம் பெருங் கரைச்சல்தான்.”
“சரியான கரைச்சல். ராத்திரி நித்திரையுமில்லை. இப்பதான் கூட்டம் குறைஞ்சிருக்கு. மாகோவிலிருந்து நிண்ட பயணந்தான். சரியான அலுப்பாவுங் கிடக்குது. ரயில் ஓடத் துவங்கீட்டெண்டால் ஒருக்கா ‘றெஸ்ட்டோரன்ட்’ பக்கம் போயிட்டு வரலாம் எண்டு பாக்கிறன்.” – அவன் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே ரயில் உறுமிக்கொண்டு புறப்பட்டது.
“அப்ப இஞ்சாலையும் ஒருக்காப் பாத்துக்கொள்ளும்” என்று சொல்லிக்கொண்டே ‘றெஸ்ட்டோரன்ட்’டை நோக்கி அவசரமாகப் புறப்பட்டான்.
அவன் சென்றதும், எதிரிலிருக்கும் பெண்ணுடன் எதாவது பேச வேண்டுமென்ற எண்ணம் உள்ளத்தை நள்ளுகிறது.
…. “உங்கடை அவர் நல்லாப் பாவிக்கிறவர் போலை கிடக்கு. வலு வெள்ளணத்தோடை துவங்கப்போறாரோ?”
“நானும் எத்தனையோ முறை சொல்லிப் பாத்திட்டன்… அந்த ஆளைத் திருத்த ஒண்ணா …” என்று சற்றுச் சலிப்புடன் சொன்னாள். பதிலைக் கேட்டதும் செந்தில்நாதனுக்குப் பரம திருப்தி. ‘எங்கை பதில் சொல்லாமல் மொக்கேனப் பட்டிடுவனோ’ என்ற பயம் ஆரம்பத்தில் இருந்தது.
“உங்களுக்குச் சொந்த ஊர் மட்டக்களப்புத்தானோ?”
“ஓம்…”
“யாழ்ப்பாணத்திலை ஆரும் சொந்தக்காரர் இருக்கினமோ?”
“அவருக்குச் சொந்த ஊர் யாழ்ப்பாணந்தான். அவரின்ர வீட்டைதான் போறம்.”
‘சரிதான் கூழ்ப்பானைக்கே போய் விழுந்த ஞாயந்தான். அவன் குடிவெறியிலைதான் இவளிலை மாட்டியிருப்பான். ஆளைப் பாக்கப் பேயன் போலைதான் கிடக்குது’ என்று செந்தில்நாதன் நினைத்துக்கொள்ளுகிறார்.
அவர் என்ன வேலை பார்க்கிறாரோ?”
“ஆசிரியர்.”
“றெயின்ட் டீச்சரோ?”
“ஹி இஸ் ஏ றெயின்ட் கிறாட்யுவேட்’ – இதைச் சொல்லும்பொழுது அவளுடைய குரலிலே பெருமையும் மண்டியிருந்தது.
“றெயின்ட் கிறாட்யுவேட்டோ? அப்படிக்கொத்தவர் சாறனோடையே வாறது? ஒரு பட்டதாரிக்கு உது வடிவே?… நீங்களும் டீச்சர்போலை…”
“ஓம்…”
‘சரிதான். உவையlள் காதலிலைதான் ஒருத்தரோடை ஒருத்தர் கொழுவியிருக்கினம்.’ காதல் என்பது பெரும் பொருள் நட்டத்தைக் கொண்டுவருந் தகாத ஒரு செயல் என்பது செந்தில்நாதனின் அபிப்பிராயம்.
எஸ்.பொ. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்; ஒரு பட்டதாரி ஆசிரியர்; நிறைய மது அருந்துபவர்; மட்டக்களப்பில் ஆசிரியரான பெண்ணைக் காதலித்து மணம்புரிந்தவர் என்பதெல்லாம் நாம் அறிந்ததே. சாறன் அணிந்து பயணம் பண்ணுவதும் சமூக மதிப்பைப் பொருட்படுத்தாத, அவரது கலகக் குணத்தையும் தனித்துவத்தையுமே காட்டுகிறது! ‘ஆளைப் பாக்கப் பேயன் போலைதான் கிடக்குது’ என்று தன்னைத் தானே செய்யும் எள்ளல்வேறு!
2. (செந்தில்நாதன்) “கையிலை என்ன பத்திரிகை? வாசிச்சு முடிச்சிட்டீரோ?”
“சுதந்திரன். இது போன கிழமைப் பத்திரிகை. அதிலை நல்லதொரு தொடர்கதை வருகுது. அதை எடுத்து வைக்க வேணும்.”
‘எங்கடை ஊராக்களுக்கும் கதை எழுதத் தெரியுமே? சும்மா எழுதுறாங்களாம். எங்கை எங்கடை பத்திரிகைகளிலை கல்கி, குமுதம், ஆனந்த விகடன் பத்திரிகைகளிலை வாற கதையளைப்போல ஒரு கதையைக் காட்டும். அகிலன், சாண்டில்யன் எழுதுகிற தொடர்கதையளைப் போல எங்கடை எழுத்தாளரை எழுதச் சொல்லும் பாப்பம். எங்கடை பீத்தலன்களும் கதையள் எழுதுகினமோ?… மு.வரதராசன்ரை ஒரு நாவலுக்கு ஈடாக எங்கடை எழுத்தாளர் எல்லோரையுஞ் சேர்ந்து ஒரு நாவல் எழுதச் சொல்லும் பாப்பம். சும்மா உவங்கள் எழுதுற கதையளைப் போட்டுப் பக்கங்களைக் கரியாக்கிப் போட்டு, எங்கடை தலையிலை
காசுக்கடிக்கிறாங்கள்…” செந்தில்நாதன் பாவம். அவர் நம் நாட்டு எழுத்தாளர்களுடைய கதைகளை மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து வரும் பத்திரிகைகளிற் பிரசுரமாகும் கதைகளைக்கூட வாசிப்பதில்லை. ‘உதுகள் மினக்கெட்ட வேலையள்’ என்பது அவருக்குத் தெரியும். ஆனால், அவருடைய ‘ரூம் மேட்’ஸாக வாழும் சகாக்கள் அவ்வப்போது சிந்திய கருத்துக்களைக் கேள்வி ஞானமாக அறிந்து, இப்பொழுது தொகுத்துக் கூறிவிட்டார்.
“ஒருவனுக்குப் பிட்டு விருப்பமாக இருக்கலாம்; மற்றவனுக்கு இடியப்பம் விருப்பமாக இருக்கலாம். இடியப்பப் பிரியன் அதிலுள்ள சிக்குகளைச் சொதியிலே சிக்கெடுத்துத் தின்பதிலுள்ள சுவையைச் சொல்ல வரக்கூடாது. ஏனென்றால்…”
‘ஏன் தம்பி வீணாக் கதையை வளர்ப்பான்? நானொரு நாளும் எங்கடை எழுத்தாளர் எழுதும் எந்தக் கதையையும் வாசிக்கிறதில்லை…”
“வாசிக்காமல் அவை தரமற்றவை என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்று கனகலிங்கம் ஏளனந் தொனிக்கக் கேட்டான். தான் ‘மொக்கு’த்தனமாக இதிலே மாட்டிக் கொண்டதை அப்பொழுதுதான் அவர் உணரலானார்.
ஒரு மாதிரியாகச் சமாளித்துக் கொண்டு, “உதிலை என்ன தொடர்கதை வருகுது? ஆர் எழுதுகிறது?” என்று கேட்டார்.
“சடங்கு என்ற தொடர்கதை. பொன்னுத்துரை எழுதுகிறார்.”
“எழுதுகிறாரோ? உந்தப் பொன்னுத்துரை ஆர் தெரியுமே? உந்தச் சாதியளும் இப்ப எழுத்தாளங்கள் எண்டு சொல்லிக் கொண்டு திரியிறாங்கள். ஒரு நாள்தான் ஆளைக் கண்டிருக்கிறன். அதுகும் றெயிலுக்கை தலைகெட்ட வெறி. சத்தியும் எடுத்துப்போட்டு பேப்பரை விரிச்சுக் கொண்டு ஒரு மூலையில் சுருண்டு கிடந்தான்…… உவங்கள் முதலிலை தங்களைத் தாங்கள் திருத்தவேணும். குடிச்சு வெறிச்சுத் திரியிற இவங்கள் ஊரைத் திருத்த எழுதுகினமோ?…”
செந்தில்நாதன் நின்று பேசும் நிலைக்களனே வேறு. அவருக்கும் கலை இலக்கிய இரசனைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதைத் தெளிந்த கனகலிங்கம், “எனக்கு இந்தத் தொடர்கதை நல்லாப் பிடித்திருக்கிறது. அவ்வளவுதான். அதை உங்களை வாசிக்கும்படி யாரும் வற்புறுத்தவில்லையே…” என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் கனகலிங்கம்.
எஸ்.பொ. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததே. ஆனால், அந்தச் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த எழுத்தாளர் சிலரிடம் காணப்படும் ‘தாழ்வுச் சிக்கல்’ சற்றும் இல்லாத – தனது ஆற்றலையும் முன்னோடுந் தன்மையையும் நன்குணர்ந்த – ‘திமிர்ந்த ஞானச் செருக்கர்’ என்பதும் பாராட்டுடன் குறிக்கத்தக்கது!
29.11.2014.
(அ.ஜேசுராசா அவர்களின் முகநூலில்)