“சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் வெளியீட்டில் த.அகிலன் ஆற்றிய உரை!

“சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் வெளியீட்டில் த.அகிலன் ஆற்றிய உரை!

சிறப்பு முகாம்
ஒரு மூடாத கல்லறை
அப்படியானால் அகதிகள்?
அவர்கள் உயிரோடு இருக்கும் பிணங்கள்!
மத்திய அரசின் தவறா?
மாநில அரசின் தவறா?
என்பதை நானறியேன்!
சிறப்பு முகாமில் வாழும்
யாமறிந்ததெல்லாம்
முகாம் சுவர் வலிது!
சிறப்புமுகாமின் சித்திரவதைகளினால்
ஒவ்வொரு நாளும் ஆண்டாய் கழியும்
அவ்வாண்டின் நாட்களோ நீண்டு தெரியும்.
இந்தப்புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் தோழர் பாலன் சிறப்புமுகாமிலிருக்கும் போது எழுதிய வரிகள் இவை.

அகதிகள் எனும் பெயரைத் தமிழுலகில் அதிகமும் பிரபலப்படுத்திய சமூகமாக நாம் இருக்கிறோம். ஆனால் ஒரு ஈழத்தமிழ் அகதி என்ற சொல் உடனடியாக மனதில் எழுப்பும் சித்திரம் ஒரு ஐரோப்பிய தமிழ் அகதி பற்றியதே. மாறாக இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழ் அகதி பற்றிய சித்திரம் அல்ல. ஒரு வகையில் அவர்கள் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட மனிதர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொருவருக்குமான நிலம் பிரிதலின் வலி என்பது தனித்துவமானதுதான் ஆனாலும் முதலாம் உலக நாடுகளில் வாழும் அகதிகளால் தாங்கள் தற்போது வாழ்ந்து வரும் நாட்டில் கிடைத்து வரும் வசதி வாய்புக்களால் அவர்கள் தங்கள் காயங்களிலிருந்து ஓரளவேனும் தப்பிக் கொள்ள முடியும். ஆனால் இந்தியாவில் இருக்கும் அகதிகளின் நிலையோ வேட்டை விலங்குகளிடமிருந்து தப்பித்து முதலைக் குளத்தில் விழுந்த கதைதான். அப்படிப் பார்த்தால் பொருளாதார,உளவியில் அடிப்படைகளில் அதிகமதிகமும் அகதி என்ற சொல்லிற்குச் சரியான உதாரணமாயிருப்பவர்கள் தமிழகத்தின் திறந்தவெளிச் சிறைகளாயிருக்கும் அகதிமுகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகளே.

தமிழகத்தில் தங்கியிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளிலும் சில பல வகைகள் உண்டு அவற்றை முதலில் சொல்லி விடலாம். படகில் வந்த அகதிகள், விமானத்தில் வந்த அகதிகள், விசிட்டிங் விசாவில் தங்கியிருக்கும் தம்மை அகதியாகப் பதிவு செய்யாத அகதிகள்,அவ்வப்போது இந்தியாவுக்கு விசிட் அடிக்கும் அகதிகள், முகாம்களில் வசிக்கும் அகதிகள், வெளிப்பதிவில் வசிக்கும் அகதிகள்,சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் இப்படி பல பிரிவுகள் உண்டு. இவற்றிலும் உட்பிரிவுகள் உண்டு – வீண் விரிவாகிவிடும் என்தால் தவிர்க்கிறேன்.

இவ்வகதிப்பிரிவுகளில் முகாம்களில் வசிக்கும் அகதிகளும், சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகளும் சபிக்கப்பட்டவர்கள். தோழர் பாலனின் இந்தப்புத்தகம் தொட்டுச் செல்வது சிறப்புமுகாம் அகதிகள் பற்றியதே. ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும். அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் புத்தகத்தில் என்பதை பாலன் தோழரின் அனுபவங்களோடு ஒப்பிடும்போது மிகவும் சிறிய அல்லது ஒப்பிடவே முடியாத எனது இந்தியஅனுபவங்களின் வழியாகவும் அவ்வனுபவங்களின் வழிவந்த இந்தியாவில் இலங்கைத் தமிழ் அகதிவாழ்க்கை பற்றிய எனது எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளவே நான் வந்திருக்கிறேன்.

சரியாக எட்டு வருடங்களின் முன்னர் ஒரு நவம்பர் மாதம் பதின்நான்காம் திகதி மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்புத் துணை ஆட்சியர் அலுவலகத்தின் பின்னால் இருந்த மரக்கூடலின் கீழிருந்த மணற்பரப்பில் அந்த ஆட்சியர் அலுவலகம் திறக்கப்படுவதற்காகக் காத்திருந்தேன். அன்றைக்கு அவ்வலுவலகம் திறக்கப்பட்டதன் பிறகான சம்பவங்கள் என் வாழ்வில் என்றைக்கும் மறக்கமுடியாத நினைவுகளாக தங்கிவிட்டன. அவற்றை வெறும் நினைவுகள் எனச் சொல்லிக் கடக்கமுடியாதென்றே நினைக்கிறேன். மண்டபம் காவல் நிலைய ஏட்டையா என்னை அழைத்துச் சென்று சிலேட்டுப்பலகையில் அடையாள எண்ணை எழுதிப்பிடித்தபடி புகைப்படத்திற்குப் போஸ் கொடுத்த போது அதுவரைக்கும் எனக்குள் பிரவாகித்துக்கொண்டிருந்த தமிழகத்து வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதான கற்பனைகள் தலைகீழாகக் கவிழ்ந்து கொட்டின. மைத்துணியில் என் கையைத் தோய்த்தெடுத்து வெள்ளைத் தாள்களில் ஏட்டையா ஒத்தியெடுத்தபோது நான் வரவேற்கப்படவில்லை என்பதும், ஓர் அகதியாக நடத்தப்படவில்லை என்கிற உண்மையும், என் வாழ்வின் பிடி என்னிடமிருந்து நழுவிச் சென்றுவிட்டதும் உறைத்தது. திடீரென்று அம்மம்மா கோடு கச்சேரி ஏறாத குடும்பப் பெருமையை நான் கெடுத்துவிட்டேன் எனப் பேசுமாப்போலவும் ஒரு நினைப்பெழுந்தது. அப்போது நான் கைதி நானாகவே கடல்தாண்டி இன்னொரு நாட்டில் வந்து சரணடைந்திருக்கும் கைதி இனி நீ அம்பேல் என்று எனக்குள் நிறைந்திருந்த பயப்பிசாசு சொன்னபடி அம்மம்மாவைப் புறக்கணித்து ஏட்டையாவைப் பின்தொடர்ந்தது.

அன்றிலிருந்து சுமார் ஒன்றரை மாதங்கள் காரணங்கள் ஏதும் சொல்லப்படாமல் முகாம் வாசிகளால் ஜெயில் என்று அழைக்கப்படும் இருபத்து நான்கு மணிநேரமும் துப்பாக்கி தாங்கிய இரண்டு பொலிசார் காவல்காக்க முகாமின் மையத்தில் அமைந்திருந்த சுற்றிலும் மூடப்பட்ட ஒரு பெரிய அறையில் இருந்தவர்களின் எண்ணிக்கையை எட்டாக்கினேன். ஒரே கேள்வியை சலிக்காமல் ஆயிரத்து ஐநூறு முறையாகவும் கேட்கும் கியூ பிரிவு பொலிசாரின் விசாரணைகளாலும், 304 எனப்படும் காகிதக் கூட்ட விளையாட்டாலும், மிகுதி நேரம் முழுவதும் விடுதலை செய்யப்படுவேனா இல்லையா என்று தவிப்பிலும் விடிந்ததும் கவிந்ததுமான நாட்கள் அவை. ஏன் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்கிற காரணத்தை சொல்லாத காவல்துறையும்,கேட்கப்பயந்த என் கையறு நிலையும் சேர்ந்து நாட்களை நரகமாக்கியபடியே இருந்தன. அந்த சிறையறையின் இடது மேற்கூரையில் சற்றே பெரிய துவாரமொன்றிருந்தது அதன்வழியே தெரிந்த துவாரமளவேயான வானத்தை வெறுமனே உற்றுப்பார்த்தபடியே பல மாலைகளைக் கடத்தியிருக்கிறேன். இரவுகளில் தீடீரென விழித்தெழுந்து துவாரம் வழி என்னைக் கவனித்துக்கொண்டிருக்கிற நட்சத்திரம் அம்மம்மாவாயிருக்குமோ என நினைத்திருக்கிறேன். வானம் மீதான பெருங்காதல் என்னிடம் அந்நாட்களில் இருந்தது. ஆசை தீர முழு வானத்தையும் பார்க்கவேண்டும் எனத் துடித்தபடியிருந்தது மனது.

இந்த இடத்தில் ராமநாதபுரம் மாவட்ட மண்டபம் அகதிகள் முகாம் பற்றிய ஒரு தகவல் உங்களுக்குச் சுவாரசியமானதாகவும் வரலாற்றின் சக்கரச்சுழற்சியின் விந்தைகளில் ஒன்றாகவும் படலாம். மண்டபம் அகதிகள் முகாம் பகுதிதான் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் மலையகத் தோட்டங்களிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவித் தொழிலாளர்கள் இலங்கைக்குப் படகேறுவதற்கு முன்பதான கடைசித்தங்ககமாக இருந்ததாம். இப்போது அது இலங்கையிலிருந்து தப்பி வருபவர்களுக்கான முகாம். அது தவிரவும் இலங்கை அகதிகளிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வீடெனச் சொல்லப்படும் சுவர்களாலான ஏதோவொன்று மலையகத் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும் லயன்களைப்போலவே அமைந்திருப்பதாயும் எனக்குத் தோன்றியதுண்டு. வரலாறு விசித்திரமானது.

நான் அந்த ஜெயிலில் இருந்த நாட்களில் என்னைவிட அனுபவசாலிகளான எனக்கு முன்பே அங்கிருந்த அந்த ஏழுபேர்களும் இந்த ஜெயில் வாழ்க்கை அடுத்த கட்டம் எப்படியிருக்கலாம் என்பது பற்றிய எதிர்வுகூறல்களை புதியவனான எனக்குச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். இடையிடையே கியூ பிரிவு பொலிசாரின் விசாரணைகளை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான உதவித் தகவல்களையும் அள்ளித் தெளிப்பார்கள். திடீரென எட்டுப்பேரில் ஒருவர் என்னைத் தனியாக ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று மிகுதி ஆறுபேரில் ஒருவன் கியூ பிராஞ் உளவாளி என வயிற்றில் புளியைக் கரைப்பார். ஒருவரை சந்தேகித்துக் கொண்டும், நட்பு பாராட்டிக் கொண்டும் ஒரு கலவையான மனநிலையில் காலம் கடத்திய நாட்கள் அவை. நிச்சயமாக அவர்களில் யாராவது ஒருவர் என்னையும் கியூ பிரான்ஞ் உளவாளி என ஒரு தடைவையேனும் நினைத்திருப்பார்.

அங்கேயிருந்தவர்களின் விடுதலைக்கான நிகழ்தகவென்பது ஐம்பதிற்கு ஐம்பதாகவே இருந்தது. ஒர் ஐம்பது இந்த முகாம் ஜெயிலிலிருந்து வெளியேறி மண்டபம் அகதிகள் முகாமில் அதிகாரிகள் ஒதுக்கும் அறையில் வசிப்பது. மற்ற ஐம்பதோ எண்ணிப்பார்க்கவே விரும்பாத திகிலூட்டும் கொடுங்கனவாயிருந்தது. அக்கொடுங்கனவின் பெயர் செங்கல்பட்டு. செங்கல்பட்டு சிறப்புமுகாம் என்பது ஈழத்தமிழனைப் பொறுத்தவரை மீட்சியற்ற முதலைகள் நிறைந்த அகழி. அங்கே போகும் வழி மட்டும்தான் உண்டும் திரும்பும் வழியென்பது கிடையவே கிடையாது என்பதில் அங்கிருந்த எல்லோருக்கும் அபிப்பிராய பேதமற்று ஒருமித்த கருத்து இருந்தது. இலங்கையில் இருக்கும் தமிழனுக்கு 4ம் மாடி என்ற சொல் என்னவகையாக திகிலைத் தருமோ அதே வகையான அச்சவுணர்வை எனக்கு அந்நாட்களில் செங்கல்பட்டு என்கிற சொல் தந்து கொண்டிருந்தது. உண்மையில் நாங்கள் இருந்த நிலைமைக்கும் செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கும் இருந்த வித்தியாசம் விடுதலைக்கான சாத்தியமே. இப்போது ஐம்பதுக்கு ஐம்பதாயிருக்கும் விடுதலைக்கான நிகழ்தகவு செங்கல்பட்டுக்குச் சென்றால் பூச்சியமாக ஆகிவிடும் என்பதே பேரச்சம் தரும் உண்மையாக இருந்தது.

இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழர்களைப் பொறுத்த அளவில் பெயரளவில் ஆவது பயங்கரவாதத் தடைச்சட்டம் என்கிற ஒரு சட்டத்தின் கீழ் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அகதிகளுக்கான சர்வதேச சட்ட ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திடாத இந்தியாவோ அந்நியநாட்டார் சட்டம் எனப்படும் ஒரு வெளிநாட்டவரை கிட்டத்தட்ட வீட்டுக் காவலில் வைக்க அனுமதியளிக்கும் சரத்தைப் பயன்படுத்தி சிறப்புமுகாம்களென்னும் சிறை வதை முகாம்களை நடாத்துகிறது.

ஆனால் என் விசயத்தில் அதிர்ஸ்டவசமாக ஐந்து வாரங்களின் பின்னர் ஒரு மாலையில் திடுதிப்பென்று வந்த கியூ பிரிவு பொலிசார் அந்தச் சிறையில் இருந்த எட்டுப்பேரில் நான்கு பேருக்கு முழுவானத்தையும் பரிசளித்தனர்.

என்னுடைய இந்த அனுபவங்கள் மிகவும் துயர் தருவனவென நான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் நான் வைத்திருப்பது வெறுமனே அன்னாசிப்பழம் தான் என்பதை பாலன் தோழரின் இந்தப்புத்தகம் கோடிட்டுக் காட்டுகிறது. அவரிடம் இருப்பதோ எட்டுப் பலாப்பழங்கள். எட்டு நெடிய ஆண்டுகள் சிறப்பு முகாம் எனும் கொடும் சிறைவாசம் அனுபவித்த தோழர்.பாலன் அவர்கள் தொகுத்த அல்லது எழுதிய இந்தப்புத்தகத்தில் இருப்பது கொழுத்த அவரது அனுபவத்தின் சின்னஞ் சிறு துளிதான்.

அரசு எனப்படுவது அதிகாரத்தின் கொடியமுகம் என்பது வெளிப்படையாக நிறுவப்பட்ட உண்மை. அரசு இயந்திரம் எப்போதுமே சாதாரண சனங்களின் அச்சங்களைப் போக்கும் அமைப்பாக இயங்கியதுமில்லை, இயங்கப்போவதுமில்லை மாறாக அவை தம்வசமிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி சாமானியர்களை அச்சுறுத்தவே செய்யும்.

ஆனால் பாலன் தோழரைப் போல நூற்றுக்கணக்கானவர்கள் சிறப்பு முகாம்களில் அனுபவிக்கும் சித்திரவதைகளுக்காகக் குரல் கொடுக்காமல் வாழாவிருக்கும் தமிழ் அமைப்புகள் இது குறித்துக் குற்றவுணர்வு கொள்ளவேண்டும். ஈழத்தமிழர்கள் சார் அமைப்புக்கள் என்று சொல்லிக்கொண்டு ராஜபக்சேவைத் தூக்கில் போடுவது எப்படி என்பதற்காக போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் அமைப்புக்கள், தமிழக் அரசியல் கட்சிகள்,ஈழப்போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டிருப்பதாக உண்டியல் குலுக்கும் அமைப்புக்கள் இங்கே அம்பலப்பட்டு நிற்கின்றன. இவர்கள் நீண்ட நெடுங்காலமாக நடத்திக்கொண்டிருக்கும் முடிவிலாத் தொடர் நாடகமான தொப்புள் கொடி உறவு என்ற நாடகம் எவ்வளவு பொய்யானது என்பதை இப்புத்தகம் உரக்கச் சொல்கிறது.

இவர்கள் தங்களுடைய சொந்த அரசு ஈழத்தமிழ் அகதிகள் மீது நடாத்தும் காட்டு மிராண்டித் தனமான வன்முறையைக் கேள்வி கேட்பதை விடுத்து உடனடியாகத் தீர்க்கமுடியாத ராஜபக்சேவுக்கு தூக்கு முதலான பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதாகக் கூவுகின்றனர்.

தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்தமிழச்சியை மருத்துவமனைக்கென்று மிரட்டி அழைத்துச் சென்று வாடகை அறைகளில் வல்லுறவுக்குட்படுத்தும் தங்களுடைய காவல்துறையை கேள்விகேட்பதை வசதியாக மறந்து. சிங்களவர்களிடமிருந்து தமிழச்சியின் மானம் காப்பதாகப் பந்தா பண்ணுகின்றனர். முள்வேலி முகாம்கள் பற்றி கண்ணீரில் நனைத்து பக்கம் பக்கமாக தொடர் எழுதித் தள்ளும் தமிழக ஊடகங்கள் தமிழக அகதி முகாம்கள் பற்றி பத்தோடு பதினொன்றாகச் செய்தி எழுதுகின்றன.

உண்மையில் தங்களுடைய தேசிய எல்லைக்கு வெளியில் ஒரு அரசை அசைத்துப் பார்க்கத் துடிக்கின்ற இவர்கள். எட்டமுடியாத கற்பனை இலக்குகளுக்காகப் போராடுவதாகப் பாவ்லாக் காட்டுகிறவர்கள். தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதே ஈழத்தமிழர்களுக்கு இழைக்கும் எந்த அநீதிக்கெதிராகவும் அதேயளவு வேகத்துடன் குரல்கொடுத்ததில்லை. ஏனெனில் ஈழத்தமிழர்களின் பெயரால் தமிழகத்தவர்களால் நடத்தப்படும் உணர்ச்சி வியாபாரத்தில் தமிழகத்தில் அல்லலுறும் அகதிகளின் சந்தைப்பெறுமதி மிகவும் குறைவானது. ஆனால் அவ்வகதிகள் அனுபவிக்கும் துயர் முள்வேலி முகாம்களைப் போலவே துயரமானது. அந்நிய மொழிபேசும் ஒருவனால் அவமதிக்கப்படுவதற்கும் சொந்த மொழி பேசும் அதிகாரவர்க்கத்தினால் அவமதிக்கப்படுவதற்குமான வலியென்பது வெவ்வேறானாதாகவே இருக்க முடியும். முன்னையதிலும் இது அதிக வலிதரப்படுவதாயிருக்கும்.

ராஜபக்சேவைத் கண்டித்து தமிழகச் சட்டசபையில் தீர்மானம் போடும் ஜெயலலிதா சிறப்பு முகாம்கள் என்ற போர்வையில் சிங்கள அரசு செய்வதைப்போன்ற சித்திரவதை முகாம்களைத்தான் நடத்துகிறார். கருணாநிதி எதைச் செய்தாலும் ஏற்றுக்கொள்ளாத ஜெயலலிதா கருணாநிதி செய்து ஏற்றுக்கொண்ட ஒரே விசயம் இந்தச் சிறப்பு முகாம்கள்தான் என்று தோழர் பாலன் இப்புத்தகத்தில் குறிப்பிடுகிறார். உண்மைதான். கருணாநிதி உருவாக்கிய அண்ணா நினைவு நூலகத்தையும், சட்டமன்ற வளாகத்தையும் மருத்துவமனைகளாக மாற்றி உத்தரவிட்ட ஜெயலலிதா கருணாநிதி உருவாக்கிய சிறப்புமுகாம்களை மட்டும் அப்படியே ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதென்பது முரண்நகையான வேதனைதான். இந்த விவகாரத்தில் இவர்கள் இருவரும் இந்திய தேசியத்தின் பிராந்திய நலன்காக்க தம் பங்கைப் போட்டி போட்டு அகதிகளைத் துன்புறுத்துவதில் காட்டுகின்றனர்.
மெய்யாகவே ஈழத்தமிழர்களைத் தங்கள் தொப்புள் கொடி உறவுகளாக இவர்கள் கருதுவது உண்மையென்றால் இவர்கள் உடனடியாகச் செய்யவேண்டியது தங்களின் கண்ணெதிரில் துயருற்றிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளிற்கு உதவுவதுதான். விடுதலைப்புலிகள் இல்லாமலாகி ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் புலிகளின் பெயரால் நாடகமாடியபடி சிறப்புமுகாம்களில் அப்பாவி ஈழத்தமிழர்களை கொடுமைப்படுத்துவதை இவர்கள் தட்டிக்கேட்க வேண்டும். இவர்கள் தமிழக மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டிய உடனடியானதும் முக்கியமானதுமான பிரச்சினை தமிழ எல்லைக்குள்ளேயே இடம்பெறுகின்ற அகதி முகாம்கள் பற்றிய பிரச்சினைதான்.

நீங்கள் இந்த இடத்தில் நான் ஏன் இவர்கள் தமிழக மக்களிடம் பிரச்சினையை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்கிறேன் என யோசிக்கலாம். இணைய வெளியெங்கும் ஈழத்தமிழர்களுக்காகப் பொங்குகிறவர்களைப் பார்த்தால் தமிழகமே ஈழத்தமிழனுக்காய் பொங்குவதாய்த் தெரியும். உண்மையில் தமிழகத்தின் சாதாரண குடிமகன் ஈழப்பிரச்சினை என்பதாக அறிந்து வைத்திருப்பது சில சொற்கள் மாத்திரமே. அச்சொற்களுக்கான சில வகை மாதிரிகளைச் சொல்கிறேன் பிரபாகரன், விடுதலைப்புலிகள், வன்னி, ராஜபக்சே, திலீபன், தமிழச்சியை வன்புணரும் சிங்களன், தமிழச்சியின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியில் எடுத்தல் இவ்வகையான துண்டு துண்டான நரம்பை முறுக்கேற்றும் சொற்களால் மாத்திரமே அவர்கள் ஈழப்பிரச்சினையை அறிந்திருக்கிறார்கள். நீங்கள் சென்னையில் ஒரு ஆட்டோவை மறித்து ஏறுங்கள் அவர் மேற்கண்ட சொற்கள் மூலம் தன்னுடைய ஈழப்போராட்ட ஆதரவை வெளிப்படுத்துவார் இவையெல்லாம் தீர்ந்த பின்னர் நாமெல்லாம் இங்கேயிருந்து பிழைக்கப் போனவர்கள் தானே என்று ஆரம்பிப்பார். உண்மையில் மலையகத்திலிருந்து திருப்பி அனுப்பப் பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களிற்குமான வேறுபாடென்பதே அவர்கள் அறியாததுதான். இன்றை வரைக்கும் அவர்களையும் இலங்கைத் தமிழர்கள் என்றே சாதராண சனங்கள் அழைக்கிறார்கள்.(அது சரியா தவறா என்கிற விவாதங்களை வேறொரு நாள் வைத்துக்கொள்ளலாம்) சிலோன் காரவுங்க என்கிற பொதுப்பெயரால் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். இந்தப் புத்தகத்தில் கூட தன்னுடைய சிறப்புமுகாம் வாக்குமூலத்தை அழித்திருக்கும் வழக்கறிஞர் இ.ர.சிவலிங்கம் ஒரு தமிழகம் திரும்பிய இந்திய வம்சாவழித் தமிழர் அவரும் விடுதலைப்புலி எனச் சொல்லப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார். உண்மையில் இந்திய அரசின் அதிகாரம் நாறிக் கொண்டிருக்கும் இடமாகத்தான் சிறப்பு முகாம்கள் இருக்கின்றன அதிகாரத்திற்கு கீழ்ப்படியாதவர்களை அடக்குவதற்கான மேலும் ஒரு வழியாகத்தான் சிறப்பு முகாம்கள் இருக்கின்றன.

ஜெனீவாவிலும், உலகெங்கிலும் நடைபெறும் மனித உரிமை அரங்குகளிலும்,மாவீரர் தின மேடைகளிலும் கலந்து கொண்டு ஈழத்தமிழனுக்கே ஈழத்தமிழன் பற்றி வகுப்பெடுக்கிறவர்கள் தன்னுடைய சொந்தச் சனத்துக்கு அதைப் பற்றி எதையுமே சொல்லித் தரவில்லை என்பதை தமிழகத் தெருக்களில் இறங்கி நடந்தால் தெரிந்து கொள்ளலாம். ஏன் பேஸ்புக்கில் பகிரப்படும் சாதிச் சங்கப் பெயர்பலகைகளில் பிரபாகரன் படத்தை வைத்திருப்பதிலிருந்தே தெரியவேண்டாமா அடிப்படையிலேயே பெரிய ஓட்டை இருக்கிறதென்பது.

ஈழத்தமிழர்கள் எப்படி முடிந்தளவு தம்முடைய அடையாளங்களை மறைத்தபடி தமிழகத்தில் வாழ நேர்வது பற்றி ‘எனது பெயர் அகிலன் நானொரு தீவிரவாதியல்ல’ என்ற தலைப்பின் கீழ் முன்பொருமுறை எனது வலைப்பூவில் எழுதியிருக்கிறேன். ஈழத்தமிழனாய் தமிழகத் தெருக்களில் இறங்கி நடந்தால், வீடு வாடகைக்குக் கேட்டால் நாங்கள் இன்னமும் ராஜீவ் கொலையாளிகள் என்ற நிலையில் இருந்து இறங்கவேயில்லை என்பது தெரியும். முப்பதாண்டுகள் இந்தியாவில் இருந்த ஒருவரால் ஏன் அங்கேயே பிறந்த இலங்கை அகதி இளைஞரால் கூட ஒரு இருசக்கர வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கூட பெற்றுவிட முடியாது என்கிற உண்மை உறைக்கும். ப்ளஸ் 2 படித்துவிட்டு மேற்படிப்புக்கான அனுமதி கோரினால் இலங்கை அகதி உனக்குக் கிடைக்காது என்கிற பதிலோ அல்லது இலங்கைத் தமிழ் அரசியல் வாதியின் பிள்ளையோ, அல்லது புலம் பெயர் புரவலரின் பிள்ளையோ அந்த அகதிக் கோட்டாவை ஆட்டையைப் போட்டுவிட்டது புரியும். ஈழத்தமிழர்களுக்காய் முப்பாதாண்டுகளாகக் குரல் கொடுத்து தமிழகத்தில் கூட எந்த அடிப்படையையும் மாற்றாத இவர்கள் தான் கடல்கடந்து எதைஎதையோ செய்வதாகத் தொண்டைத் தண்ணி வற்றக் கத்தித் தீர்க்கிறார்கள்.

சிறப்புமுகாம் எனும் கொடிய வதை முகாம்கள் தமிழக மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டால் மாத்திரமே மூடப்படும். அல்லது முள்வேலி முகாம்களுக்காக நடத்தப்படும் போராட்டங்கள் எல்லாம் தங்களுடைய அரசுசார்ந்து பிராந்திய நலனைக் காக்க அகதிகள் பிரச்சினையைத் தீர்க்காமல் அப்படியே வைத்திருக்க தமிழ் அமைப்புக்களும் இந்திய அரசும் சேர்ந்து செய்யும் சதிநாடகமாகவே பார்க்கத் தோன்றுகிறது. இந்தப் புத்தகத்தில் பாலன் தோழரின் கோரிக்கையும் அதுவே. ஆகவே தமிழ் அமைப்புக்கள் தங்கள் எல்லை தாண்டிய சவடால்களை நிறுத்தி விட்டு தம் எல்லைக்குட்பட்டு கண்ணெதிரே நடைபெறும் கொடுமைகளை தட்டிக்கேட்க முன்வரவேண்டும். புலம்பெயர்ந்த புரவலர்கள் இதிலயும் கொஞ்சம் முதலிடலாம்.

ஒரு ஈழத்தமிழ் அகதி அதிகாரத்தின் கடைசிப்படிநிலையில் இருப்பவரையும் பார்த்து மிகவும் அஞ்சவேண்டியிருக்கிறது. தாசில்தார் அலுவலக உதவியாளரிலிருந்து வட்டாட்சியர் வரையும் வணங்கித் தொழவேண்டியிருக்கிறது. அவர்களது பண மற்றும் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டியிருக்கிறது. ஒரு அகதிப்பெண்ணின் கணவர் அந்தப் பெண்மீது ஆசைகொள்ளும் இந்திய அதிகாரிகளால் விடுதலைப்புலி என சிறப்புமுகாமில் அடைக்கப்படுவதற்கான அனைத்துச் சாத்தியங்களுமுள்ளன. அதிகாரத்தின் கடைசிப்படிநிலையில் உள்ளவர்களால் எப்படி அதிகாரத்தின் மொத்த உருவமாக மாறமுடியும் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.
நாங்கள் மண்டபம் முகாம் சிறையில் இருந்த சமயத்தில் வெளியே காவலுக்கு நின்ற காவல்துறையினரோடு பேச்சுக்கொடுப்பதும், தீப்பெட்டி பத்திரிகை போன்றவற்றைப் பரிமாறுவதும் நடக்கும். ஒரு முறை நாங்கள் கொடுத்த தீப்பெட்டியை காவலர் திருப்பித் தரவில்லை. அதை எங்களோடு சிறையில் இருந்து இன்றைக்குச் சிறப்புமுகாமில் இருக்கிறானா இல்லையா எனத் தெரியாத லால் எனும் நண்பன் திருப்பிக் கேட்டான். அவர் அது தரமுடியாது எனச் சொன்னார். இவன் உடனடியாக சற்றுக் கோபமாக என்ன சார் இப்படிப்பண்றீங்க இது சரியில்லை என்று சொன்னான். உடனடியாகவே தன் குரலை உயர்த்திய கான்ஸ்டபிள் கெட்டவார்த்தையில் திட்டி ஏய் இன்னா நினைச்சிட்டிருக்க? உன்ன என்ன பண்ணுவேன்னு தெரியுமா? செங்கல்பட்டிலயே காலம் முழுதும் களி திங்கணுமா? கியூ பிராஞ்சுகிட்ட துப்பாக்கியப் பறிக்கப்பாத்தான்னு சொல்லிருவேன் மவனே ஜாக்கிரதை என்று உறுமினார். அப்போதுதான் எங்கள் மரமண்டைக்கு எங்கள் உயிர் இருக்கும் கிளிப்பொந்து அந்தக் கான்ஸ்டபிளின் கையில் இருப்பது உறைத்தது. உடனடியாகவே மிகுதி ஏழுபேரும் சேர்ந்து அந்த கான்ஸ்டபளின் உள்ளத்தை குளிரவைக்கும் முயற்சிகளில் கவர்ச்சி நடனம் ஆடாத குறையாக இறங்கினோம். ஆனால் அன்றைக்கு உள்ளுக்குள்ளே அவமானத்தால் குறுகிய மனமொன்று இன்றும் இதை எழுதுகையிலும் ஒரு முறை குறுகியது.

கடைசியாக பாலன் தோழரிடம் ஒரு கோரிக்கை உண்டு. நீங்கள் உங்களுடைய சிறப்புமுகாம் வாழ்க்கை அனுபவங்கள் பற்றி விரிவான ஒரு புத்தகத்தை எழுதவேண்டும். இந்தப்புத்தகத்தில் நீங்கள் எழுதியிருக்கிற நீதிமன்றத்திற்கான வாக்குமூலம் நீதி மன்றத்திற்கானது. அது உங்களுடைய ஆன்மாவின் காயத்தை இங்கே காட்சிப்படுத்த வில்லை. சட்டபூர்வமான ஆவணங்களைவிடவும் அனுபவத்தின் எளிய சொற்கள் சனங்களின் இதயத்தை தட்டி எழுப்பவல்லவை. அதிகாரத்தின் கூரிய நகங்களின் தீண்டலை என்னைப் போல் ஒன்றரை மாதம் சிறையனுபவம் உள்ளவனே தரிசித்திருக்கமுடியுமெனில். எட்டு ஆண்டுகள் அதன் கொடும்பிடியில் சிக்கித்தவித்த உங்களுடைய காயங்கள் எவ்வளவு ரணமானவை என்பதை இந்த உலகிற்கு நீங்கள் திறந்து காட்டுங்கள். தனிப்பட அதன் நினைவுகளை மீட்ட விரும்பாதவராகவே நீங்கள் இருக்கலாம் ஆனாலும் குவியல் குவியலாகப் பிணங்களைக் காட்டினாலும் இரங்காத உலகம் இதுவென்பதை நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். இந்தப்புத்தகம் உங்களுடைய கொடிய பெருத்த அனுபவத்தின் மிகச் சில புள்ளிகளையே தொட்டுச் செல்கிறது என என்னுடைய சிற்றனுபவங்களிலிருந்து நான் ஊகித்தறிகிறேன். இந்த உலகத்தின் ஆன்மாவை அசைக்க இது நிச்சயமாகப் போதாது. நீங்கள் சிறப்பு முகாம்கள் வதை முகாம்கள் என்ற சுட்டிக்காட்டுதலை மட்டுமே உங்கள் வாக்குமூலம் வழியாகச் செய்திருக்கிறீர்கள். ஆனால் அது உங்களுடைய வேதனையை வாசகருக்கு கடத்தப் போதுமானதில்லை என்றே நான் கருதுகிறேன். இந்தப் புத்தகம் சிறப்புமுகாம் எனும் கொடுமிருகத்தின் பெரும்பசியின் கனலை வாசருக்கு வழங்கியதாக நான் எண்ணவில்லை.

நீங்கள் அந்த நெடிய எட்டு ஆண்டுகளைப் பற்றி அங்கே நீங்கள் சந்தித்த மனிதர்கள் பற்றி, தினசரி வாழ்க்கை பற்றி, சிறைக்கு வெளியே வந்து சந்திக்க ஆவலாயிருந்த மனிதர்கள் பற்றி நீங்கள் எழுதவேண்டும். தினமும் சந்தித்த அவமானங்கள் பற்றி எழுதவேண்டும். இந்தப் புத்தகத்தின் போதாமையாக நான் கருதுவது அதைத்தான். இப்போது வந்திருக்கும் இந்தப் புத்தகம் ஒரு பெரிய துயர் நிரம்பிய ஓவியமொன்றின் ஒன்றைக்கோடுதான். நீங்கள் எழுதப்போகும் முழுமையான அனுபவத் திரட்டு வரலாற்றை நாளை தெரிந்துகொள்ளப்போகும் அடுத்த சந்ததிக்கு நீங்கள் கொடுக்கப்போகும் பெரிய ஆவணமாயிருக்கும் அதை நீங்கள் செய்யவேண்டும் என உங்களை நான் வேண்டுகின்றேன்.

Share This Post

Post Comment