வடக்கு, கிழக்கில் எவராவது அடிப்படைவாதத்தின் ஊடாக தமது அரசியல் நிலைப்பாட்டை ஏற்படுத்த முயற்சித்தால் அவர்கள் மக்களால் ஓரங்கட்டப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நீண்டகாலமாக பாரிய அழிவுகளுக்கு முகங்கொடுத்த வடக்கு, கிழக்கு மக்கள் தமது வாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் மீளவும் இடம்பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் எவராவது அடிப்படைவாதத்தின் ஊடாக தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானித்தால் அவர்களுடைய நிலைமை துரதிஸ்ட வசமானதாகவே அமையும் என்றும் அவர் கூறினார்.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் போட்டியிட்ட அடிப்படை வாதிகள் சகலரும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாத்திரமன்றி தெற்கிலும் அடிப்படைவாதிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்பது கடந்த பொதுத் தேர்தலின் மூலம் உணர்த்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
வரவு- செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.
முரண்பாடுகளைத் தோற்றுவித்து அதனூடாக சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என நாடாளுமன்றத்தில் உள்ள எவராவது கருதினால், அவ்வாறான பாதையைக் கைவிடவேண்டும். அதேபோல அடிப்படைவாதத்தைத் தூண்டி அதனூடாகத் தமது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு தற்பொழுது எந்த நிலையில் இருந்து கொண்டு யார் முயற்சித்தாலும் அவர்கள் மக்களால் ஓரங்கட்டப்படுவார்கள் என்றும் கூறினார்.
(யாழ் உதயன்)