கலிபோர்ணியாவில் 14 அப்பாவிகளைக் கொன்ற கணவன்-மனைவிக்கு தீவிரவாத அமைப்புகள் சிலவற்றுடன் தொடர்பு இருந்ததாகத் தெரிய வந்துள்ளது.. கலிபோர்னியா மாநிலத்தின் சான்பெர்னார்டினோ நகரில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மீது கணவனும் மனைவியுமாக இணைந்து கடந்த 2-ந் தேதி துப்பாக்கி மூலம் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 14 பேர்கள் உயிரிழந்தும் 21 பேர்கள் படுகாயம் அடைந்தும் உள்ளனர். தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்ற வேளையில் சயீத் ரிஸ்வான் பாரூக் (வயது 28) அவருடைய மனைவி தஸ்பீன் மாலிக்(27) இருவருக்கும் போலீசாருக்கும் நடைபெற்ற மோதலில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பாரூக் அமெரிக்க குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர். அவருடைய மனைவி தஸ்பீன் மாலிக் பாகிஸ்தான் நாட்டில் பிறந்தவர். அண்மையில் திருமணம் செய்து இவர்கள் இருவருக்கும் ஆறு மாதக் குழந்தையொன்று இருந்துள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட தம்பதி பயன்படுத்திய வாகனத்திலிருந்து இருந்து 2 நவீன யந்திர துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், குண்டு துளைக்காத உடைகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் தாக்குதல் நடத்திய மண்டபத்தில் 150 ரவைகள் சுட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சான்பெர்னார்டினோ நகரில் பாகிஸ்தான் தம்பதி வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் குண்டுகள் தயாரிப்பதற்கான வெடிமருந்துப் பொருட்கள், 12 குழாய் வெடிகுண்டுகள், ஆயிரம் ரவைகள் சிக்கியுள்ளது. எனவே இவர்கள் மேலும் இன்னொரு தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.