கால்பந்தாட்ட பந்தய மோசடிகளில் உலகளவில் பெரிய குற்றக் கும்பலொன்றை வழிநடத்தியவர் என குற்றஞ்சாட்டப்பட்ட நபரைக் மீண்டும் கைதுசெய்துள்ள சிங்கப்பூர் அதிகாரிகள், அவர் விசாரணையில்லாமல் தடுத்து வைக்கப்படுவார் எனத் தெரிவிக்கின்றனர்.
டான் டான்(Dan Tan), ஏற்கனவே 2 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்ட நிலையில் அவரைத் தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறி சிங்கப்பூர் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, கடந்த வாரம் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அவரை மீண்டும் தடுத்து வைக்கும் நோக்கில், இப்போது உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள் புதிய உத்தரவில், அவர் மீதான குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையும், அவரால் பொதுப்பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலும் விவரிக்கப்பட்டுள்ளன.
போட்டிகளின் முடிவை முன்கூட்டியே நிர்ணயம் செய்யும் பந்தய மோசடிகளின் முக்கிய சூத்திரதாரியாக அவர் விளங்கினார்.
அவரது கட்டுப்பாட்டில் இருந்த சர்வதேசக் கும்பலொன்று இத்தாலி, ஹங்கேரி மற்றும் ஃபின்லாந்தில் நடைபெற்ற போட்டிகளில் முறைகேடுகளை செய்தனர் என அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை டான் மறுத்து வருகிறார்.