பாகிஸ்தானுடன் போர் விமானக் கொள்வனவில் ஈடுபடுவது தொடர்பில் இலங்கை, இந்தியாவிடம் இருந்து அதிகமான அழுத்தத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஜே.எப் 17 ரக போர் விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை ஏற்கனவே உடன்பாட்டை எட்டியுள்ளது.முன்னாள் விமானப்படை தளபதி ஜெயலத் வீரக்கொடி பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக இருந்தபோது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.ஒற்றை இயந்திரம் பன்மைத்துவ போரியல் தன்மையில் சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் இந்த விமானத்தை தயாரித்துள்ளது. இதன் பெறுமதி 500 மில்லியன் டொலர்களாகும்.
எனினும், இதற்கு பதிலாக தம்மிடம் உள்ள போர் விமானங்களை கொள்வனவு செய்யுமாறு இந்தியா, இலங்கையை வலியுறுத்திவருகிறது.
இந்நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டொவால், குறித்த பாகிஸ்தானிய விமானக் கொள்வனவு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் ரணிலிடமும் இந்தியாவின் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
இதேவேளை, இந்தியாவிடம் இருந்து போர்க்கப்பல் ஒன்றை கொள்வனவு செய்ய இலங்கை விருப்பத்தை வெளியிட்டுள்ளது.எவ்வாறாயினும் இலங்கை, பாகிஸ்தானின் விமானத்தை கொள்வனவு செய்தால், அது இந்திய பாகிஸ்தான் உறவில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
(யாழ் உதயன்)