சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்கும்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று பிரதமருக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் நான்கு முறை வெள்ளம் பெருக்கெடுத்திருப்பதால், ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் தங்களது விலை உயர்ந்த பொருட்களை இழந்திருப்பதாகவும் அரசு அளிக்கும் நிவாரணம் அவர்களுக்குப் போதுமானதாக இருக்காது என்றும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மத்திய அரசுக்கு சில ஆலோசனைகளையும் ஜெயலலிதா இந்தக் கடிதத்தில் முன்வைத்துள்ளார். காப்பீடு செய்யப்பட்ட பொருட்களுக்கான காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாகப் பரிசீலிப்பது, வங்கிக் கடன்களை மறு அட்டவணை செய்வது, வெள்ளம் பாதித்த பகுதிகளில் தனி நபர் கடனாக ஐந்து லட்ச ரூபாய் வரை வழங்குவது, வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு உதவும் வகையில், மார்ச் மாதம் வரை அவற்றுக்கு ஆயத் தீர்வையை ரத்து செய்வது உள்ளிட்ட யோசனைகளை முன்வைத்திருக்கும் ஜெயலலிதா, இவற்றை நிறைவேற்ற உதவுமாறு பிரதமரைக் கோரியுள்ளார்.

மழை பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார் கருணாநிதி
இதற்கிடையில், சென்னையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி நேரில் பார்வையிட்டு, சிலருக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். காலை 10.45 மணியளவில் புறப்பட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள நெடுஞ்செழியன் நகர், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பாலம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வெள்ள சேதத்தைப் பார்வையிட்ட அவர், சிலருக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். நாளை தாம்பரத்தில் உள்ள முடிச்சூர் பகுதியை கருணாநிதி பார்வையிடுவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைத் தவிர பிற கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும், உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரி வளாகங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சென்னை, காஞ்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 13 வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(பிபிசி தமிழோசை)