சர்வதேசப் பொலிஸார் ( இன்ரபோல்), புலனாய்வுப் பிரிவுகள் ஆகியவற்றிடம் அறிக்கை பெறப்பட்ட பின்னரே புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம் செய்யப்பட்டது .எனவே, இந்த விடயத்தை இனவாதக் கோணத்தில் பார்க்கக் கூடாது, எல்லாத் தமிழர்களும் பயங்கரவாதிகள் அல்லர் இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எட்டு புலம்பெயர் அமைப்புகள்மீதான தடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும் பாதுகாப்பு அமைச்சிடம் கேள்விகளை எழுப்பியிருந்தார். இவற்றுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதில் வழங்கிக் கொண்டிருந்தார். இதன்போது குறுக்கீடு செய்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஒவ்வொரு தமிழரையும் பயங்கரவாதியாகவும், தமிழ் அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாகவுமே கடந்த அரசு அடையாளப்படுத்தியது. ஆனால், புதிய அரசு அவ்வாறு அல்ல. மேற்படி பிரச்சினையை வேறு கோணத்திலேயே நாம் பார்க்கின்றோம். இன்ரபோல், புலனாய்வுப் பிரிவுகளுடன் பேச்சு நடத்திய பின்னரே தடைநீக்கம்செய்யும் முடிவுக்கு அரசு வந்தது. இந்த விடயத்தில் அரசியல் நோக்கில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து வரும் தமிழர்கள் வடக்குக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
பெற்றோரைப் பார்க்க வந்தவர்கள்கூட திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த நிலைமையை நாம் மாற்றியுள்ளோம். புதியதொரு ஆரம்பம் அவசியம் அதை நோக்கியே செல்ல வேண்டும் என்றார்.
(யாழ் உதயன்)