ஜஸ்ரின் ரூடோ அரசின் உத்தேச 25000 சிரிய அகதிகள் குடியமர்வு-புனர்வாழ்வுத் திட்டத்தின் முதற்கட்டமாக 150 சிரிய அகதிகள் நாளை வியாழக்கிழமை கனேடிய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலம் ஜோர்டானிலிருந்து பியர்சன் சர்வதேச விமானநிலையத்தை வந்தடைகின்றார்கள்.
இம்மாதமுடிவிற்குள் குடியமர்த்தப்படவிருக்கும் பத்தாயிரம் அகதிகளில் நான்காயிரம் பேரை ஒன்ராரியோ மாகாணத்தில் குடியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அடுத்தவருடம் மாசிமாதமுடிவிற்குள் இருபத்தையாயிரம் பேரையும் குடியமர்த்த ஏதுவான திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அகதியாக வருபவர்களின் சகலதேவைகளையும் செவ்வனே நிறைவேற்றி, இவர்கள் பியர்சன் விமானநிலையத்திலிருந்தும் நீங்கி வெளியேறும்போது தம்மைக் கனேடிய நிரந்தரக்குடிவரவாளர்கள் எனப் பெருமையுடன் அழைக்கத்தக்க வகையில் அனைத்தையும் கைக்கொள்ளச் சகலதுறைசார் அலுவலர்களும் விமானநிலையத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள உள்ளக வரவேற்புத்தளத்தில் முகாமிட்டிருப்பார்கள்.
அத்துடன் இவ்வாறு வருபவர்களுக்கு சமூக காப்புறுதி இலக்கம் (SIN), OHIP கிடைக்கும் வரையான காலப்பகுதியில் மருத்துவத் தேவையினைப் பூர்த்தி செய்ய ஏதுவான விஷேடமாக நடுவண்ணரசினால் வழங்கப்படும் தற்காலிகச் சுகாதார அட்டை உட்பட குளிர்காலத்துக்குத் தேவையான உடைகள், காலணிகள், காலுறைகள் மற்றும் தொப்பிகளும் வழங்கப்படும்.
அத்துடன் மேற்படி வரவேற்புத் தளத்தில் தங்கியிருக்கும் வேளையில் தேநீர், கோப்பி, சிற்றுண்டிகள், இலவச சர்வதேச தொலைதொடர்புச் சேவைகளும் வழங்கப்படுவதுடன், அன்றையதினம் இரவு உணவுடன் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டு மறுநாள் காலையில் உறவினர்கள் உடையவர்களை முறையே அவர்களுடன் இணைத்தும், யாரும் அற்றவர்கள் தற்காலிகமாக கனேடியப்படைகளின் இடைத்தங்கல் முகாம்களிலும் தங்க வைக்கப்படுவார்கள்.
மேலும் இவர்கள் தங்களை கனேடிய சமூகத்தில் இணைத்துக் கொள்ளத்தக்க வகையில் மொழி வகுப்புக்கள் நிகழ்த்தப்படுவதுடன் வேலை தேடிக்கொள்ளும் வழிவகைகளும் உருவாக்கிக் கொடுக்கப்படும்.
இவ்வாறு இவ் அகதிகளுக்குத் தொழில் கொடுத்து உதவும் நிறுவனங்களுக்கு உதவித் தொகையாக ஆண்டுக்குப் பதினாறாயிரம் டொலர்களும் வழங்கி ஊக்கிவிக்கப்படும். மேலும் மொன்ரியல் விமான நிலையத்திலும் இதேயளவு கனபரிமாணத்தில் ஆவன செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.