இந்தியாவின் முதல் அதிவேக ரயில்பாதையை அமைக்க ஜப்பானின் 14.7 பிலியன் டாலர் திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்திய அமைச்சரவை ஜப்பானின் இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாக பிரதமர் மோடி அலுவலக அதிகாரி ஒருவர் கூறினார்.
மும்பைக்கும் அஹமதாபாதுக்கும் இடையே இந்தப் பாதை அமைக்கப்படும். இந்த இரு நகரங்களுக்கிடையேயான சுமார் 505 கிமீ பயணம் இப்போது எட்டுமணி நேரம் பிடிக்கிறது. இந்த அதிவேக ரெயில் பாதை போடப்பட்டால், அந்தப் பயணம் இரண்டு மணி நேரத்தில் முடியும்.
ஜப்பான் இந்தத் திட்டத்துக்கு ஆகும் செலவில் அரைவாசிக்கும் மேல் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் சுமார் 50 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும் வகையில் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானிய பிரதமர் ஷின்ஷோ அபே இந்தியாவுக்கு இந்த வார இறுதியில் வரும்போது இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அதிவேக ரெயில் பாதை அமைக்கும் திட்டங்களுக்கு சீனாவும் போட்டி போடுகிறது. இந்தியாவில் பழசாகிக் கொண்டிருக்கும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவைப்படும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளில், இந்த திட்டமும் ஒன்று.
மோடி அரசு நாட்டின் ரெயில்வே துறையை நவீனப்படுத்த அடுத்த ஐந்தாண்டுகாலத்தில், சுமார் 137 பிலியன் டாலர்களை முதலீடு செய்ய உறுதியளித்திருக்கிறது.
கடந்த மாதம், அமெரிக்காவின் ஜெனெரல் எலெக்ட்ரிக் மற்றும் பிரான்ஸின் ஆல்ஸ்டம் ஆகிய நிறுவனங்கள் , இந்திய ரெயில்வேக்கு புதிய எஞ்சின்களை வழங்கும் பல பிலியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களை வென்றன.
(பிபிசி தமிழோசை)