சுவிஸ் நாட்டில் போர்க்கால அடிப்படையில் தீவிர பாதுகாப்பு

சுவிஸ் நாட்டில்  போர்க்கால அடிப்படையில் தீவிர பாதுகாப்பு

பயங்கரவாதத் தாக்குதல் எந்நேரத்திலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நிகழக்கூடிய வாய்ப்பு அதிகமென்ற அச்சமேலீட்டினால் சுவிஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்க மத்திய உளவு நிறுவனமான CIA சுவிஸ் உளவுப்பிரிவினருக்கு வழங்கியிருந்த பயங்கரவாதச் சந்தேகநபர்கள் நால்வரடங்கிய நிழற்படத் தோற்றத்தை ஒத்தவர்கள் பயணித்த காரொன்று ஜெனீவாவில் பொலீஸ் சோதனைச்சாவடியொன்றினைக் கடந்துசென்ற நிகழ்வைத் தொடர்ந்தே இவ்வகை எற்பாடுகள் தீவிரமாகியுள்ளது.

மேலும் குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் பேர்ண் அல்லது அதன் சுற்றுப்புறங்களில் மறைந்திருக்கக்கூடுமென்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

இதன் எதிரொலியாக வழமைக்கு மாறாக ஐக்கிய நாடுகள் சபைக் கட்டடங்கள் சூழ்ந்த வளாகத்தில் பாதுகாப்புப் படையினர் MP 5 கனரக இயந்திரத்துப்பாக்கிகள் சகிதம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சந்தேக நபர்களுக்கும் அண்மையில் பாரிஸில் நிகழ்ந்த சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய முஸ்லீம் தீவிரவாதக்கும்பலுக்குமான தொடர்பெதுவும் ஊர்ஜிதப்படுத்தப்படாதபோதும் இவர்கள் பயணித்ததாகக் கூறப்படும் கார் பெல்ஜியத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்ததாக அறியக்கிடக்கிறது.

அத்துடன் பாரிஸில் 130 அப்பாவி உயிர்களைக் காவு கொண்ட பேரழிவின் சூத்திரதாரிகளில் பலர் பெல்ஜிய குடியுரிமையுடையவர்களென்பது மேலதிக அச்சமூட்டும் விடயம். அத்துடன் யூத இனத்தவர்கள் செறிவாக வாழுமிடங்களில் பிரத்தியேகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் வேண்டப்பட்டுள்ளனர்.

Share This Post

Post Comment