அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை!

அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை!
அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் இல்லையென, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நிட்டம்புவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கைதிகள் குறித்து பலர் பல தகவல்களை வெளியிட்டு வந்தாலும், அரசியல் கைதிகள் என எவரும் இல்லையென அவர் இதன்போது குறிப்பிட்டார். தமிழ் அரசியல்வாதிகள் கூறி வருவதைப் போன்று அவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் அல்லர் எனவும், குண்டுகளை வெடிக்கச் செய்து மனித கொலைகளுக்கு உதவிய குற்றவாளிகள் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
அவ்வாறானவர்களை நீதிமன்றின் முன் நிறுத்தி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மட்டுமே முடியுமென்றும், மாறாக அவர்களை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார். இதனடிப்படையில் தான் கடந்த காலத்தில் சிலருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டதென சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களின் பிரகாரம் கைதிகளை விடுதலை செய்வதற்கு யாருக்கும் உரிமையில்லையென பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
(யாழ் உதயன்)

Share This Post

Post Comment