‘காணாமல்போனோர் ஆணைக்குழு’ நடத்தும் விசாரணை

‘காணாமல்போனோர் ஆணைக்குழு’ நடத்தும் விசாரணை

இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் வடக்கு மாகாணத்தில் விசாரணைகளை நடத்திவருகின்றது.

இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் நம்பிக்கை அளிக்கவில்லை என்று கூறி, அதன் அமர்வுகளை புறக்கணிக்குமாறு காணாமல்போனவர்களை கண்டறியும் குழுக்களின் பிரதிநிதிகள் கோரியிருந்தனர்.

எனினும், யாழ் மாவட்டத்தில் நடைபெறுகின்ற அந்தக் குழுவின் விசாரணைகளில் பலர் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் மாவட்டத்திலிருந்து கிடைத்த 2500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு, மூன்றாவது நாளாக இன்று ஞாயிறன்று பருத்தித்துறையில் விசாரணைகளை நடத்தியிருந்தது.

இந்த விசாரணைகள் கட்டம் கட்டமாக யாழ் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இம்மாதம் 16 ஆம் திகதி வரையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

யாழ் மாவட்ட அரச செயலகத்தில் நடைபெற்ற முதல் இரண்டு-நாள் விசாரணைகளின்போது 165 பேர் சாட்சியமளித்ததாகவும், இன்றைய விசாரணைகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போனதாகக் கூறப்படும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பண்பாட்டுத்துறை தலைவரான கவிஞர் புதுவை இரத்தினதுரையை கண்டுபிடித்துத் தருமாறு, அவருடைய சகோதரி யாழ் அரச செயலகத்தில் நடைபெற்ற விசாரணைகளில் கோரியிருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசாரணைகளில் சாட்சியமளித்தவர்களில் ஒருவரான கௌசி கிறிஸ்டி பிரசன்னா என்ற பெண், 2007 ஆம் ஆண்டு தனது கணவன் அவருடைய நண்பருடன் யாழ். நகருக்குச் சென்றபோது சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் வெள்ளைவானில் இரண்டு பேரையும் கடத்திச் சென்றதாகவும் அவரைக் கண்டுபிடித்துத் தருமாறும் கோரியிருப்பதாக பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், காணாமல் போயுள்ள தனது கணவரைக் கண்டுபிடிக்க உதவும் என்ற நம்பிக்கையிலேயே இங்கு சாட்சியமளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனது கணவனைக் கண்டு பிடிப்பதற்கான விசாரணைகளை நடத்துமாறு (இமிகிரேஷன்) குடிவரவு-குடியகல்வு பொலிசாரிடம் தாங்கள் கோரியிருப்பதாக ஆணைக்குழுவினர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

ஆயினும் இமிகிரேஷன் பொலிசார் என்றால் யார் என்று தனக்குத் தெரியாது என்றும் அவர்கள் யார் என்பதை அறிவதற்கும் தான் முயற்சிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதுவரையில் பல இடங்களிலும் இவ்வாறான விசாரணைகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், காணாமல்போயுள்ள ஒருவராவது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த விசாணைளினால் என்ன பயன் என்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலளார் குணதாஸவிடம் தமிழோசை வினவியது.

‘விசாரணைகளைப் புறக்கணிக்குமாறு கோருகின்ற, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களுக்கென ஒரு நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் எங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாக சாட்சியங்களைப் பதிவு செய்து வருகின்றோம்’ என்றார் அவர்.

‘மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், பலர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்து வருகின்றார்கள்’ என்றார் குணதாஸ.

‘காணாமல் போயுள்ளவர்களை 24 மணித்தியாலத்தில் கண்டுபிடிக்க முடியாது. அது இலகுவான காரியமல்ல. முறைப்பாடு தெரிவித்தவர்களின் வீடுகளுக்கு செல்லும் விசாரணையாளர்கள் ஆழமாக விசாரணைகளை நடத்தி வருகின்றார்கள். அவர்களின் அறிக்கைகள் கிடைத்ததும், ஆணைக்குழு ஒட்டுமொத்தமான விசாரணைகள் குறித்து இறுதி முடிவை எடுக்கும்’ என்றார் குணதாஸ.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment