நோர்வே நாட்டில் அரசியல் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நோர்வே நாட்டில் அரசியல் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த சிலமாதங்களில் என்றுமில்லாதவாறு அகதி அந்தஸ்துக் கோரி நோர்வே நாட்டுக்குச் செல்வோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இவர்களில் தொண்ணூற்றைந்து வீதமானோர் சிரியாவிலிருந்து வருவதனால் இக்கட்டான பாதுகாப்பு அடங்கலான விடயங்களைக் கைக்கொள்ள நோர்வே பாதுகாப்பு அமைச்சு தனிப் பிரிவொன்றினை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு தஞ்சம் தேடி வருவோரின் கைத் தொலைபேசி, இன்ன பிற இலத்திரனியல் தொழில்நுட்ப உபகரணங்கள், உடமைகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது வெளிப்பட்டவை பாதுகாப்புக்குறித்துப் பாரிய அச்சத்தையும் நெருக்குவாரத்தையும் அதிகாரிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இவ்வகதிகளில் பெரும்பான்மையானோரின் கைத்தொலைபேசியில் இருந்த ISIS தீவிரவாதிகள் கைதிகளைப் படுகொலை செய்யும் வீடியோக்கள், தலைகள், முண்டங்கள், இளஞ்சிறார்களின் உயிரற்ற உடல்கள், ISIS கொடிகள், இலச்சினைகள் போன்றவை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தலையிடியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் சிரியா, ஈராக்கினூடாக வந்துள்ளமையினால் மேற்படி குறித்த நாடுகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பாடல்செய்து பின்னணிபற்றி விசாரித்து உண்மைத்தகவல்களைத் திரட்டுவதிலும் கையறுநிலை தோன்றியுள்ளது.

எல்லோரும் தீவிரவாதத்துடன் தொடர்பு உடையவர்களென்ற அடிப்படையில் விசாரணைகளைக் கைக்கொள்வது அபத்தமெனக் கருதும் நோர்வேஜிய அரசு இவர்களின் பின்னணி பற்றிய விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் வருவோரின் எண்ணிக்கையினைக் குறைப்பதிலும், முடிந்தால் அறவே தவிர்ப்பதற்கும் ஏதுவான மறைமுகமான கைங்கரியஙங்களில் நோர்வே ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லெபனானிலிருந்து டென்மார்க் நோக்கித் தஞ்சம் கோரிப் படையெடுத்துக் கொண்டிருந்த லெபனானிய அகதிகளை அறவே நிறுத்தி மட்டுப்படுத்தும் நோக்கில், டென்மார்க்கில் புதிய ஆட்சிமாற்றம் செயற்பட ஆரம்பித்துள்ளது. அகதிகள் குறித்த புதிய அரசின் கொள்கைகளும், அருகிய ஏற்புவீதமும், அரைவாசிக்கும் குறைவாகக் குறைக்கப்பட்டுள்ள மாதாந்த அகதிகள் உதவிக்கொடுப்பனவுத்தொகைகளும் அகதி அந்தஸ்து கோருவோருக்குப் பெரும்பாதகங்களை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறான நிலைமைகள் அகதிகளுக்குச் சாதகமாக இருக்காதென்ற சாரப்படக் கடந்த புரட்டாதி மாதத்தில் லெபனானிய முதன்மைத் தினசரிப்பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்களை நாள்தோறும் டென்மார்க் அரசு பிரசுரிப்பித்திருந்தது.

இவ்வேற்பாட்டினை அடியொற்றி நோர்வேஜிய அரசும் சிரியாவின் முதன்மைநாளிதழ்களில் விளம்பரம் செய்திருந்ததாயினும், இச்செயல் உள்நாட்டில் அதீத விமர்சனத்துக்குள்ளானமையினால் கடந்தமாதமுடிவில் மேற்படி விளம்பரத்தினை நிறுத்திக்கொண்டது.

ஆனாலும் இரண்டாவது கைங்கரியமாக, தஞ்சம் கோரி நோர்வே நாட்டிற்குள் வந்துள்ளோர் மீளத்திரும்பிப்போகும் பட்சத்தில் தலா பத்தாயிரம் அமெரிக்க டொலர்களும் விமானச்சீட்டும் வழங்கப்படுமென நோர்வேஜிய அரசு அறிவித்தமையானது 1072 பேர்கொண்ட 230 குடும்பங்கள் மீளச்செல்லப் பிரியப்பட்டு விருப்புத் தெரிவிக்க ஏதுவானதாக அமைந்துள்ளது.

Share This Post

Post Comment