உரிய பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வழி செய்யும் தமிழக அரசின் சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் இந்திய உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை முடித்து வைத்திருக்கிறது.
இந்த வழக்கு குறித்த இன்றைய தீர்ப்பில், தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி மட்டுமே கோவிலின் அர்ச்சகர்களை நியமிக்கும் நடைமுறை/மரபு எங்கெல்லாம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறதோ அங்கே அந்த நடைமுறையும் மரபும் அப்படியே தொடரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அப்படியான நியமனங்கள் இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அடிப்படைத் தத்துவத்துக்கு முரணானது அல்ல என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
“பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம்”
அதேசமயம் இப்படி ஆகம விதிகளின் கீழ் அல்லாத அர்ச்சகர் நியமனங்களால் பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகும்போது அப்படியான அர்ச்சகர் நியமனம் ஒவ்வொன்றும் தனித்தனி வழக்காகக் கருதப்பட்டு அந்தந்த கோவிலின் அர்ச்சகர் நியமனம் என்பது ஆகமவிதிகளின் கீழ் தான் செய்யப்பட வேண்டுமா அல்லது தமிழக அரசின் சட்டம் கூறும் பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கிலும் தனித்தனியாக முடிவு செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தீர்ப்பு இந்த வழக்கின் வாதி மற்றும் பிரதிவாதி என்கிற இரண்டு தரப்பினராலும் இருவிதமாக பார்க்கப்படுகிறது. அர்த்தப்படுத்தப்படுகிறது.

தமிழக அரசு கொண்டுவந்த பயிற்சி பெற்ற அனைவரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்த சிவாச்சாரியார்கள் தரப்பில், இன்றைய தீர்ப்பு தங்கள் தரப்புக்கான வெற்றி என்பதாக பார்க்கிறது.
“ஆகமவிதிகளின்படியான நியமனங்களை ஆதரிக்கும் தீர்ப்பு”
ஆகமவிதிப்படி மட்டுமே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பையே இந்த தீர்ப்பும் உறுதிப்படுத்தி இருப்பதும், அத்தகைய அர்ச்சகர் நியமனங்கள் இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற தத்துவத்துக்கு முரணானதல்ல என்று நீதிபதிகள் தெரிவித்திருப்பதும் தமக்குக் கிடைத்த வெற்றியாக இவர்கள் பார்க்கிறார்கள்.
அதேசமயம் இவர்களின் எதிர் தரப்பான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற தமிழக அரசின் சட்டத்தின் ஆதரவாளர்களும் இந்த தீர்ப்பை தமக்குக் கிடைத்த வெற்றி என்றே கூறிவருகிறார்கள். அவர்களின் பார்வையில், உரிய பயிற்சி பெற்ற அனைத்து ஜாதி இந்துக்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்யவில்லை என்பதை தம் தரப்புக்குக் கிடைத்த வெற்றியாக இவர்கள் கூறுகிறார்கள்.
“தமிழக அரசின் சட்டத்தை நீதிபதிகள் ரத்துசெய்யவில்லை”
மேலும் ஆகமவிதிகளின் கீழ் மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்கலாம் என்கிற நடைமுறை கடைபிடிக்கப்படும் குறிப்பிட்ட சில கோவில்களைத் தவிர, பெரும்பான்மையான இந்துக் கோவில்களில் முறையான பயிற்சி பெற்ற அனைத்து ஜாதி இந்துக்களுமே அர்ச்சகர் ஆக இன்றைய தீர்ப்பு வழி திறந்துவிட்டிருக்கிறது என்பது இவர்களின் வாதமாக இருக்கிறது.

இந்த இருதரப்பார் தவிர சட்டத்துறை வல்லுநர்கள், இந்த தீர்ப்பு முன்னுக்குப் பின்னால் சில முரண்களை தன்னுள் கொண்டிருப்பதாகவும், இந்தத் தீர்ப்பு தொடர்பில் சிலபல விளக்கங்களை இந்திய உச்சநீதிமன்றத்திடம் கோரவேண்டிய தேவை இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
தமிழக அரசோ அல்லது தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சி பெற்று வேலையின்றி பாதிக்கப்பட்டிருக்கும் அர்ச்சகர்களோ உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரவேண்டிய அவசியம் இருப்பதாக சட்டவல்லுநர்களில் சிலர் கருதுகிறார்கள்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்காக சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் தொடரும் சட்ட சர்ச்சையில் இன்றைய தீர்ப்பு இறுதித்தீர்ப்பாக இருக்காது என்பதே சட்டநிபுணர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.
(பிபிசி தமிழோசை)