இலங்கை நாடாளுமன்ற வரவு செலவுத்திட்டம் 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. திட்டத்துக்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் கிடைத்தன.
ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் அதனை ஆதரித்து வாக்களித்தனர்.
13 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தாலும், அதன் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
எதிர்க்கட்சிகள், சிவில் சமூகங்கள் உட்பட பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட பல திருத்தங்கள் ஏற்கப்பட்டு அது அங்கீகரிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா கூறினார்.
பெருந்தோட்ட ஊழியர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்துக்கு புறம்பாக, ஜனவரியில் வரவிருக்கும் தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பில் தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளடக்க உறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.