தமிழ்நாட்டுக்கு 26000 கோடி தேவை – ஜெயலலிதா கோரிக்கை

தமிழ்நாட்டுக்கு 26000 கோடி தேவை – ஜெயலலிதா கோரிக்கை

தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள 25,912 கோடி ரூபாய் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் செவ்வாயன்று எழுதியிருக்கும் கடிதத்தில், தமிழகத்தில் பெய்த மழை வெள்ளத்தின் காரணமாக, மாநிலத்தின் உள்கட்டமைப்பிற்குக் கடுமையான சேதம் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கனவே தமிழகத்தை மத்தியக் குழு பார்வையிட்டிருந்தாலும், அந்தக் குழுவினர் பார்வையிட்டுச் சென்ற பிறகு தான் நான்காவது முறையாகப் பெரும் மழை பெய்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ள பாதிப்புகளை தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் சீரமைக்க ஒட்டுமொத்தமாக 25,912.45 கோடி ரூபாய் தேவை என முதல்வர் தன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

உடனடியாக தேசியப் பேரிடர் நிதியிலிருந்து 2,000 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டுமென்றும் முதல்வர் கோரியிருக்கிறார்.

இதற்கு முன்னதாக, பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியிருக்கும் மற்றொரு கடிதத்தில், இலங்கை வசம் உள்ள 47 மீனவர்களையும் 57 படகுகளயும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியிருக்கிறார்.

கடந்த 17ஆம் தேதி தான் சில மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டிருக்கும் நிலையில் 19ஆம் தேதி ஒரு எந்திரப் படகும் அதிலிருந்த 6 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் இந்த விவகாரத்தில் பிரதமரின் கவனத்தை உடனடியாகக் கோருவதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment