எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய தம்பதியினர் என்று உரிமை கோரி ஏமாற்றியவர்களுக்கு, நேபாள அரசு மலையேறுவதற்கு பத்து வருட தடை விதித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து திங்களன்று முடிந்த விசாரணையில், அந்த தம்பதியினர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததாக தெரிவிக்கப்பட்ட புகைப்படம் போலியானது என்று தெரியவந்துள்ளது.
இந்த தடை, மலையேறுபவர்களை போலியான மற்றும் நேர்மையற்ற நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்க வைக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தம்பதி, மே மாதத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்ததாக கூறிக் கொண்டது, மலையேறுபவர்களால் விசாரிக்கப்பட்டது.
தினேஷ் மற்றும் தாரகேஷ்வரி ரதோட் சிகரத்தின் உச்சியில் இருக்கும் புகைப்படங்கள் நிச்சயமாக புனையப்பட்டது என்று வாதிடுகின்றனர்.
நேபாளத்தின் சுற்றூலாத் துறை, அவர்கள் மலையேறியதாக முதலில் சான்றிதழ் வழங்கியது. ஆனால் தற்போது விசாரணைக்கு பிறகு அதை ரத்து செய்துள்ளது.
இந்த தம்பதியினர் வேறொரு புகைப்படத்தில் அவர்களின் உருவத்தை பதித்துள்ளதாகவும் அங்கு உள்ள பதாகைகள் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த மற்றொரு இந்தியரின் புகைப்படம் எனவும் நேபாள சுற்றுலாத் துறை முதல்வர் சுதர்ஷன் பிரசாத் தக்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து விளக்கங்கள் கேட்கப்பட்ட போது ரதோட் தம்பதியினர் சரியாக ஒத்துழைக்கவில்லை எனவும், அவர்களை மலையேறுதலில் வழி நடத்திய இரு நபர்களையும் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
புனே காவல்துறையில் வேலைப்பார்க்கும் இந்த தம்பதியினர், அவர்கள் வழிகாட்டிகளின்படிதான் செய்ததாக கூறி தங்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
ஆனால் பெங்களூருவைச் சேர்ந்த மலையேறும் நபரான சத்யரூப் சித்தாந்தா, ரதோட் தம்பதியினர் காட்டிய புகைப்படம் தன்னுடையது என்று நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

ரதோட் தம்பதியினர் மலை உச்சியை அடைந்ததாக கூறப்படும் நேரமும் அவர்கள் வெற்றியை அறிவித்த செய்தியாளர் சந்திப்பிற்குமான நேர இடைவெளியைப் பொறுத்தே சந்தேகங்கள் எழுந்தன.
மேலும் புகைப்படத்தில் இருவேறு துணிகளை அணிந்திருந்தனர் என்பதும் சந்தேகங்களை எழுப்பியது.
(பிபிசி தமிழோசை)