இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை புதன்கிழமை இலங்கை வரும் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை வெள்ளிக்கிழமை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சருடன் வடமாகாண அமைச்சர்களும் இந்தச் சந்திப்பில் பங்குகொள்வார்கள்.
இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மைக்கலோலே முதலமைச்சருடன் இன்று காலை தொடர்பு கொண்டு இது தொடர்பாகத் தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பான் கீ மூனுக்கும் இடையில் நடைபெறும் பேச்சுக்க ளையடுத்து, வெள்ளிக்கிழமை நண்பகல் 2.00 மணியளவில் முதலமைச்சருடனான சந்திப்பு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பான் கீ மூனின் இலங்கை விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரலில் முதலமைச்சருடனான சந்திப்பு இடம்பெற்றிருக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பான் கீ மூனைச் சந்திக்கும் போது, அதில் முதலமைச்சரும் இணைந்துகொள்ளலாம் என முதலமைச்சருக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்திருந்தபோதிலும், அதற்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை.
இந்தப் பின்னணியிலேயே இன்று முதலமைச்சரைத் தொடர்பு கொண்ட ஐ.நா வதிவிட பிரதிநிதி பான் கீ மூனை அவரும், அவரது அமைச்சர்களும் சந்திப்பதற்கான ஏற்பாடு தனியாகச் செய்யப்பட்டிருப்பதாகவும், நிகழ்சி நிரலில் அது உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்