கரூரில் கல்லூரிக்குள் புகுந்து வகுப்பறையில் இருந்த மாணவியை முன்னாள் மாணவன் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர், ஈரோடு சாலையில் உள்ள கரூர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் எனும் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த சோனாலி. இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற சோனாலி, வகுப்பறையில் அமர்ந்திருந்தார். காலை 10 மணியளவில் அப்போது வகுப்பறையில் மாணவர் போல் நுழைந்த வாலிபர் ஒருவர் திடீரென சோனாலியை பின்னால் இருந்து மரக்கட்டையால் கடுமையாக தாக்கினார். மாணவியை சரமாரியாக தாக்கிய அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதில் சோனாலி படுகாயமடைந்தார். காலை 11 மணியளவில் கரூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சோனாலி, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மதியம் கொண்டு செல்லப்பட்டார். சுமார் 2 மணி நேரம் சிகிச்சை அளித்தபோதும் தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே வகுப்பறையில் நுழைந்து சோனாலியை தாக்கிய வாலிபரை கரூர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் உதயகுமார் என்பதும், இந்த கல்லூரியில் இடை நின்ற மாணவர் என்பதும் தெரியவந்தது. உதயகுமார் சரியாக கல்லூரிக்கு வராததால் சஸ்பென்ட் செய்யப்பட்டதையடுத்து அவர் கல்லூரிக்கு வருவதில்லை என கூறப்படுகிறது. சோனாலியை உதயகுமார் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அதை சோனாலி ஏற்க மறுத்ததால் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே கல்லூரிக்கு 3 நாள் விடுமுறையை அறிவித்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். கல்லூரியில் நிகழ்ந்த இந்த சம்பவம், மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. “கல்லூரியில் வகுப்பறையில் இருந்த மாணவியை ஒருவர் வந்து தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச்செல்லும் அளவுக்கு தான் கல்லூரியில் பாதுகாப்பு என்பது உள்ளது. இது தொடர்பாக எந்த தகவலையும் தெரிவிக்காமல் விடுமுறையை மட்டும் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது,” என்றார்.
கல்லூரியில் புகுந்து மாணவி கட்டையால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.