பதினான்கு பில்லியன் டாலர் மதிப்பிலான வரி பாக்கியை செலுத்த, தொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
அயர்லாந்து அரசுடன் ஆப்பிள் நிறுவனம் செய்து கொண்ட ஏற்பாடுகள் குறித்து நடந்த விசாரணையில் ஆப்பிள் நிறுவனம் தனது லாபத்தில் சிறிய தொகையை மட்டுமே வரியாக செலுத்தியது தெரியவந்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் ஒரு பில்லியன் டாலர் வரி செலுத்துவதற்கு பதிலாக ஐம்பது டாலர்களை மட்டுமே செலுத்தியதாக அதில் தெரியவந்துள்ளது; இது சட்டவிரோத அரசு உதவி என ஆணையம் வாதிட்டுள்ளது.
ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக் அந்நிறுவனம் சிறப்பு ஒப்பந்தம் மூலம் சலுகைகள் எதையும் பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அயர்லாந்து அரசு தாங்கள் செலுத்த தேவையில்லை எனக் கூறும் வரியை ஐரோப்பிய ஒன்றியம் செலுத்தச் சொல்லுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆப்பிள் மற்றும் அயர்லாந்து ஆகிய இரு தரப்பும், தாங்கள் மேல் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தீர்ப்பு ஐரோப்பாவில் வெளிநாட்டு முதலீட்டை குறைத்துவிடும் எனவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார கூட்டணியை பாதிக்கும் எனவும் அமெரிக்க நிதி துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் இதுபற்றிக் கூறுகையில், தன்னிச்சையான இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் வரி நடைமுறைகளை முறைப்படுத்தும் முயற்சிகளை குறைத்து மதிப்பிடும் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.