”ட்ரம்பின்” ஜெருசெலெம் தலைநகரப் பிரகடனம்!

”ட்ரம்பின்” ஜெருசெலெம் தலைநகரப் பிரகடனம் !

இஸ்ரேலின் தலைநகரமாக ‘ஜெருசெலெமை’ அமெரிக்கா அங்கீகரிக்கப் போவதாக ஜனாதிபதி ”டிரம்ப்” அறிவித்த சில நாட்களின் பின்னர், இரவு உணவிற்கு ‘ரமலாவில்’ நண்பரின் வீடொன்றுக்கு ‘நியூயோர்க்கர்’ சஞ்சிகையின் பத்தியாளர் Raja Shehadeh சென்றார். அந்த வீட்டுச் சந்திப்பு பாலஸ்தீன சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கவில்லை. மேலும் வழக்கறிஞரான அவர் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் ஒரு பேராசிரியர், ஒரு கட்டடக் கலைஞர், ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் பாலஸ்தீனிய சிறு வணிகர்களுக்கு உதவிய ஒரு முதலீட்டு நிதி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆகியோர் இருந்திருந்தார்கள்.

அந்தச் சந்திப்பு பாலஸ்தீனிய தேசிய இயக்கத்திலிருந்து பெரும்பாலும் பிரிந்து சென்றவர்கள் அடங்கிய ஒரு குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே இருந்தது. பல ஆண்டுகளாக, அக்கறையுடன் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய சமாதான முன்னெடுப்பு அல்லது பாலஸ்தீனிய அரசியலின் பொதுவான நிலைமை பற்றி அவர்கள் அரிதாகவே விவாதித்திருந்திருக்கிறார்கள். விருந்தினர்களில் ஒருவர் ”டிரம்ப்பின்” பிரகடனத்திற்குப் பின்னர் பாலஸ்தீனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர். அந்தப் பத்திரிகையாளர், தனது தொலைபேசியில் தன்னால் பதிவு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஊர்வலங்களினதும், ஆர்ப்பாட்டங்களினதும் படங்களை அங்கிருந்தவர்களுக்குக் காட்ட விரும்பினார்.

போலீசார் பதினேழு வயது பாலஸ்தீனீய இளைஞன் ஒருவனைக் கைது செய்வது குறித்த ஒளிக்காட்சியும் அதில் ஒன்று. அதில் அவனது கைகளை இஸ்ரேலியப் பொலீசார் இறுக்கிப் பற்றிப் பிடித்துப் பலவந்தமாக எப்படியெல்லாம் உபத்திரவப்படுத்தி இழுத்துச் செல்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நீண்ட கடைத்தெருவின் ஒரு முனையில் உள்ள பிரஞ்சுக் கலாச்சார மையத்திலிருந்து அவரை இழுத்துச் செல்கிறார்கள் பொலிசார். குதிரையில் இருந்தவாறு போலீஸ்காரர்கள் பாலஸ்தீனப் பெண்களை எப்படி எப்படியெல்லாம் மோசமாகத் தாக்குகிறார்கள்…கொடுமைப்படுத்துகிறார்கள் என்று பாருங்கள் என்று மேலும் சொன்னார். வணிக ரீதியான கடையடைப்பை மேற்கொள்ளும் கடைக்காரர்களில் ஒருவர் மூடிய கதவுகளுக்குப் பின்னால் அச்சம் தோய்ந்த முகத்தோடு எப்படிப் பரிதாபமாகக் காணப்படுகிறாரர் ….தெரிகிறதா….என்றார்!

ஒரு அரபுக்கார பாலஸ்தீன உளவாளி ஆர்ப்பாட்டக்காரராக மாறிச் செயற்படுகிறார். அவர் ஆர்ப்பாட்டக்காரர்களினதும் ஊர்வலங்களில் பங்கேற்பவர்களினதும் படங்களை எடுத்து இஸ்ரேலிய பொலீசுக்கு அனுப்புகிறார். உடனே பொலீசார் நடவடிக்கை எடுப்பதற்காகத் திரண்டு வருகிறார்கள், இப்போது அவர்களிடம் ஆதாரம் இருக்கிறது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் அவர்களைப் பொலீசார் கவனமாகக் கையாளுகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொல்ல அவர்கள் விரும்புவதில்லை. இறப்புக்கள் அவர்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்பதால் !

இந்த ஒளிப்படங்களைப் பார்த்தபோது, இஸ்ரேலிய காவல்துறையின் திறனைப் பாராட்ட வேண்டும் என அந்தக் கூட்டத்தில் இருந்த ”நியூயோர்க்கர்” பத்தியாளர் நினைத்துக் கொண்டார். இஸ்ரேலியப் பொலிஸார் பல தசாப்தங்களாக ஆர்ப்பாட்டங்களில் இருந்து கற்றுக் கொண்ட படிப்பினைகளை லாவகமாகவும் தந்திரமாகவும் பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவு. அவர்கள் திறமையாகக் கையாளும் தந்திரமான வழிமுறைகளினால் ‘டிரம்ப்பின்’ அறிவிப்பைக் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் இஸ்ரேலிய பொலிஸ் வெற்றிபெற முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாயது. உறுதியுடன் அதைச் செய்யத் தேவையான சக்தியும் வளங்களும் அவர்களுக்கு இருக்கிறது.

அடுத்து, அந்தப் பத்திரிகையாளர் பாலஸ்தீன எதிர்ப்பாளர்களின் கோசங்களை அந்தக் கூட்டத்தில் உள்ளவர்கள் கேட்க வேண்டுமென வலியுறுத்தினார். பாலஸ்தீனிய அதிகார சபையின் தலைவர் ‘மஹ்மூத் அபாஸுக்கு’ எதிராக அவர்கள் முழங்கிய கோசம் அதிலொன்று. அவர்கள் மிதவாத பாலஸ்தீனிய தலைமையை நேரடியாகக் குறி வைத்து “அபாஸ், உங்கள் பாஸ்தாவை கைவிடுங்கள்” என்று கோசமிட்டு வெளிப்படையாகக் குறை கூறினர். அவர்கள் பாலஸ்தீனிய தலைமைப் பேச்சாளரான ”ஸாப் எரேகாட்டுக்கு” எதிராகக் கோசமிட்டனர், அவர் சமாதான முன்னெடுப்புகளைக் கையாளுவதைக் கண்டித்து, சமாதான முன்னெடுப்புகள் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

நீண்ட விவாதத்தின் போது இரவு உணவிற்கு பிறகு, இஸ்ரேலும் அதன் நட்பு நாடான அமெரிக்காவும் பாலஸ்தீனியர்களுக்கு மிகப்பெரிய வரலாற்றுத் தவறொன்றினை இழைத்து விட்டதாக அவர்கள் முடிவெடுத்திருந்தார்கள். ‘ட்ரம்பின ”ஜெருசலேம் பிரகடனம்”, நீண்டகால அமைதிப் பேச்சுகளை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாகவும் சுதந்திர பாலஸ்தீனிய அரசு எதிர்காலத்தில் உருவாக வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடனும் அன்றைய இரவு உரையாடல் முடிவடைந்தது.

இஸ்ரேல் பிரதம மந்திரி ‘பெஞ்சமின் நெத்தன்யாகு’ மற்றும் ‘ட்ரம்ப்’ ஆகியோர் அறிவித்திருந்த இந்தப் பிரகடனம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது. இஸ்ரேலியர்கள், சர்வதேச சட்டத்தை மீறிக் குடியேற்ற நிர்மாணத்துடன் இடைவிடாமல், சமாதானத்தை முன்னெடுத்துச் செல்வதாகக் கூறிக்கொண்டிருந்தார்கள். சாத்தியமான பாலஸ்தீனிய அரசொன்றை உருவாக்கும் சாத்தியத்தைக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். இவ்வாறு சொன்ன வார்த்தைகள் அமெரிக்காவின் ‘ஜெருசலத்தைத்’ தலைநகராக்கும் அறிவிப்பு வெளிவந்திராவிட்டால் இன்னும் நீண்டு கொண்டிருந்திருக்கும். இன்னும் ஐந்து ஆண்டுகளோ…..ஒருவேளை, பத்து ஆண்டுகளோ இந்த நிலைமை தொடர்ந்து கொண்டிருந்திருக்கலாம். ஆனால் ‘டிரம்ப்பின்’ ”ஜெருசலத்” தலைநகர அறிவிப்புக்குப் பிறகு அதன் ஆயுள் முடிந்துவிட்டது.

இந்த அறிவிப்பு ‘அபாஸின்’ அரசியல் எதிர்காலத்தைச் சீர்குலைக்க வல்லதாக இருக்கலாம், அவரால் கட்டியெழுப்பப்பட்ட மூலோபாயமானது அண்மைய ஆண்டுகளில் அமெரிக்கா மீதான நன்னம்பிக்கையுடன் இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதே. அதற்காக ‘அபாஸ்’ இஸ்ரேலின் கோரிக்கைகள் பலவற்றைத் திருப்திப்படுத்தியிருந்தார், ஆனால் இறுதியில் இன்று இஸ்ரேலியர் பிரதமர் ‘நத்தனியாகுவால்’ நிராகரிக்கப்பட்டுள்ளார். இப்பொழுது அமெரிக்க அதிபர் ‘டிரம்ப்பின்’ அறிவிப்பினால் பாலஸ்தீனர்கள் அமெரிக்கா மீது நம்பிக்கை கொள்ள முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஒஸ்லோ’ உடன்பாட்டின் அடிப்படையில் பாலஸ்தீனப் பிரச்சினையில் அமெரிக்கா நியாயமான நடுவராகச் செயற்படாதென்பதும் அம்பலமாகியுள்ளது.

பாலஸ்தீனியர்களின் நம்பகத்தன்மையை மீண்டும் பெறுவதற்கான முயற்சியில், ‘ட்ரம்பின்’ முடிவை அடுத்து பாலஸ்தீனியர்கள் இனிமேல் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவை இடை நடுவராகப் பணியாற்ற அனுமதிக்கப் போவதில்லை என்று ‘அபாஸ்’ அறிவித்துள்ளார். மேலும் “ஜெருசலேம் எப்பொழுதும் பாலஸ்தீனத்தின் தலைநகரமாக இருக்கும்” என்று இஸ்தான்புல்லில் நடைபெற்ற ‘இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்’ கூட்டத்தில் ‘அபாஸ்’ அறிவித்தார். தொடர்ந்து “இப்பொழுதில் இருந்து பாலஸ்தீனர்களின் அரசியல் செயல்பாட்டில் அமெரிக்காவின் எந்தப் பங்கையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, ஏனென்றால் அது இஸ்ரேலுக்கு முற்றிலும் ஆதரவாகவும் பாலஸ்தீனர்களுக்கு முரணாகவும் பாரபட்சமாக நடக்கிறது” என்று பேசினார்.

பல ஆண்டுகளாக ‘அபாஸின்’ அரசியல் நடவடிக்கைகளை அவதானித்து வருபவர் Raja Shehadeh. தனிப்பட்ட முறையில் ‘அபாஸ்’ அவருக்குப் பழக்கமானவரும் கூட! அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதில் அதீத அக்கறை காட்டிச் செயற்படும் மனிதர் அபாஸ் என்றே Raja Shehadeh நம்பிக்கை கொள்கிறார். அதன் பொருட்டு நத்தன்யாகு அவர் மீது கொடுத்த அழுத்தங்களைத் தாங்கிக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் நகர்ந்தவர் என்பதையும் Raja Shehadeh பதிவு செய்கிறார்.

‘அபாஸின்’ பேச்சுவார்த்தையைக் கையாளும் திறன் குறித்த சில விமர்சனங்கள் உள்ளன, ஆனால் ‘அபாஸ்’ பதவியை இழந்தால் இஸ்ரேல் ஒரு முன்னணிப் பாலஸ்தீனிய மிதவாதியை இழந்து விடும். ‘அபாஸ்’ சமாதான பேச்சுவார்த்தைகளின் உறுதியான நம்பிக்கையாளர். ‘நத்தன்யாகுவும்’ மற்றைய இஸ்ரேலியத் தலைவர்களும் ‘அபாஸைக்’ கீழ்நிலைப்படுத்த அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர். ‘டிரம்ப்’ மூலம் ஜெருசல தலைநகரப் பிரகடனத்தை அமுல்படுத்துவதன் மூலம் ‘நத்தன்யாகுவும்’ அவரது ஆதரவாளர்களும் ‘அபாஸ்’ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் சூழலை உருவாக்கியுள்ளார்கள். இது ‘அபாஸ்’ மீதான இறுதி அடியாக இருக்கலாம்.

‘ஒஸ்லோ’ உடன்படிக்கையின் அனுசரணையாளரான அமெரிக்கா அதன் முக்கிய கடப்பாடுகளில் ஒன்றை வெளிப்படையாக மீறுகிறது: இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகளின் போதே ஜெருசலேமின் நிலை தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது ‘ஓஸ்லோ உடன்படிக்கையின்’ போது அமெரிக்க அனுசரணையுடன் இரு தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட முன் நிபந்தனை! ‘டிரம்ப்பின்’ அதிகாரத்துவமும், சுயநலமும் தீர்க்கதரிசனமற்ற நோக்குநிலையும் அமெரிக்கா நிலைப்படுத்த வேண்டிய நியாயமான நடுவருக்கான அனைத்துப் பண்புகளையும் நீர்த்துப் போக வைத்துள்ளது. இனி பாலஸ்தீனர்கள் ‘ட்ரம்பின்’ யூத மருமகன் ‘ஜெராட் குஷ்னர்’ உறுதியளித்துள்ள அமைதிப் பேச்சுவார்த்தை வரை பொறுத்திருப்பார்களா ?

(பத்தியாளர் Raja Shehadeh இன் ”நியூயோர்க்கர்” பதிவின் சாரம்)

Share This Post

Post Comment