”ரூபவாகினி” பொங்கல் விழா நிகழ்வில் ஊடகமாகக் கலந்து கொள்ளாது!

அன்பின் கனடியத் தமிழர் பேரவை உறுப்பினர்களே, ஆதரவாளர்களே, நலன் விரும்பிகளே!

எமது தைப்பொங்கல் இரவு விழாவை ஒளிபரப்புவதற்கு; ரூபவாகினியின் தமிழ்ச்சேவை விடுத்த வேண்டுகோளுக்கு கனடியத் தமிழர் பேரவை (“பேரவை”)  அனுமதி வழங்கியமை பற்றி   சனவரி 3, 2018 அன்று   மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம்.

கனடியத் தமிழர் பேரவையானது ஆரம்பத்தில் இருந்தே கனடாவிலும், தாயகத்திலும் வாழும் தமிழர்களுடைய நலனை முன்னிறுத்தி சிறிலங்காவில் இடம்பெற்ற தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது.

2009 ஆயுதப் போராட்ட முடிவிற்குப் பின்னராக தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட  பேரழிவுகள், போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான வன்செயல்கள் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கவும், நீதியான தீர்வினை வழங்கவும் வலியுறுத்தி வருகிறது.

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் பொருட்டும் துரிதகதியில்  அதனை   நடைமுறைப்படுத்தும் பொருட்டும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் வேலைத்திட்டத்தில் நாம் செயற்பட்டு வருகின்றோம்.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தினால் இயற்றப்பட்ட தீர்மானம் 30/1 (நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனிதஉரிமைகள்) இனை    நிறைவேற்றக் கடுமையாக உழைத்து  வருகின்றோம்!

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் நிலங்களை விடுவித்தல், சிறையில் வாடும் கைதிகளை விடுதலை செய்தல், காணமால் போனோர் பற்றியவிசாரணைகளை முன்னெடுத்தல், வடக்கு-கிழக்கு வாழ் தமிழர் வாழ்வாதார, வணிக மேம்பாட்டை உறுதி செய்தல் போன்றவை எமது செயற்திட்டங்களில்முக்கியமானவை! அத்தோடு புதிய  அரசியலமைப்பு ஒன்றின்  உருவாக்கத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றோம்.  இலங்கை வாழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவினால் தான் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றமானது சாத்தியமாகும்.

ரூபவாகினிக்கு எமது நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்ய வழங்கிய அனுமதி தொடர்பாக எமது உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நலன்விரும்பிகளைச்சந்தித்தோம். அவர்களது கருத்துகளை சிரத்தையோடு கேட்டறிந்தோம். பெரும்பாலானோர் தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கானமுயற்சிகளில் சகல தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற வேண்டியஅவசியத்தை ஏற்றுக்கொண்டனர். இருந்தும் ரூபவாகினி, தமிழ்ச்சேவையின் எமது நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்வதற்கான வேண்டுகோளைப்  ‘பேரவை” ஏற்றுக்கொள்வதற்கான காலம் இதுவல்ல என்ற கருத்தையும் தெரிவித்திருந்தார்கள். இக்காரணங்களை முன்னிட்டு ரூபவாகினியின் தமிழ்ச்சேவை கனடியத் தமிழர் பேரவையின் தைப்பொங்கல் விழாவில் கலந்துகொள்ளாது  என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கனடியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களே, நலன்விரும்பிகளே, உங்கள் கருத்துகளுக்கும், தொடர்ந்த ஆதரவுக்கும் எமது மனமார்ந்த நன்றி.

இப்படிக்கு உண்மையுள்ள,

இயக்குனர் சபை
கனடியத் தமிழர் பேரவை

Share This Post

Post Comment